

மேலப்பாட்டம்
நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை மேலப்ப்பாட்டம் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் அக்.21 இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு அக்.24-ல் வெளியாகிறது.
இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும்விதமாக திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வந்துள்ளார்.
அவர் இன்றும், நாளையும் (அக்.17,18) பிரச்சாரம் செய்கிறார். இன்று காலை மேலப்பாட்டம் பகுதியில் அவர் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அரசியல் பேச்சுபோல் அல்லாம யதார்த்தமான கலந்துரையாடலாக பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், தமிழக முதல்வர் யார் என்று கேட்டார். மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி என்றதும் இல்லை.. இல்லை அவர் "எடுபிடி" பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி மோடியின் 'எடுபிடியாக' இருக்கிறார் எனக் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அதிமுகவினர் தெளிவானத் தகவல் எதுவுமே சொல்லவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
அந்த குற்றச்சாட்டைக் கூட, "உங்க பக்கத்து வீட்ல யாராவது இறந்துட்டா நீங்கபோய் எப்படி இறந்தாங்க, என்னாச்சு என்று கேட்பீங்க அவுங்களும் சொல்வாங்க. ஆனா, தமிழகத்தின் முதல்வரா இருந்தவர் எப்படி இறந்தார் என்று உங்க யாருக்காவது தெரியுமா? கேள்வி கேட்டவர்களுக்கும் இன்னும் பதில் சொல்லல.. "என்று மேடைப் பேச்சு போல் அல்லாமல் சாதாரணமாகப் பேசினார்.
தொடர்ந்து மேலத்திருவேங்கடநாதபுரம் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் செய்யும்போது, "டாக்டர் ஆகவேண்டிய அனிதா தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தராததன் காரணமாக உயிரிழந்தார். ஆனால் தமிழக முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழக அரசு, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது" என்று பேசினார்.
அவர் ஒரு நடிகரும் என்பதால் அவரைக் காண அப்பகுதிகளில் கூட்டம் கூடியிருந்தது.
தொடர்ந்து இன்று மாலை அவர் வேன் மூலம் களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார்.