Last Updated : 17 Oct, 2019 11:57 AM

 

Published : 17 Oct 2019 11:57 AM
Last Updated : 17 Oct 2019 11:57 AM

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் உதித் சூர்யாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்- தந்தை மனு தள்ளுபடி

மாணவர் உதித் சூர்யா (இடது), தந்தை டாக்டர் வெங்கடேசன் (வலது)

மதுரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னை மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் உதித் சூர்யா கைதாவதற்கு முன்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் கைதான நிலையில் முன்ஜாமீன் மனு ஜாமீன் மனுவாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதித் சூர்யாவின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (அக்17) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "வெங்கடேசன் இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்தவர்கள் குறித்த முழுத் தகவலையும் தெரிவிக்கவில்லை. விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பும் வழங்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "அதனை ஏற்க இயலாது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கண்டறிவது அவசியம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து, "வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் எதற்காக ஜாமீன் வழங்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, தகவல்களை வழங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, "இந்த வழக்கைப் பார்க்கும்போது 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்திலிருந்து திட்டம் கிடைத்துள்ளது போல் உள்ளது. மாணவர் உதித் சூர்யாவின் வயது மற்றும் மன அழுத்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

ஆனால், வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால், தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்கிறது" என்று கூறி உத்தரவிட்டார்.

வாழ்க்கையைக் கெடுத்த தந்தை..

தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாணவர் உதித் சூர்யாவின் வாழ்க்கையை தந்தை வெங்கடேசன் கெடுத்துவிட்டார். அவரின் செயல்பாட்டைப் பார்க்கும்போது 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது. அரசு மருத்துவராக இருந்த ஒருவரே இத்தகைய குற்றத்தைச் செய்யலாமா" எனக் கேட்டார்.

முன்னதாக, கடந்த விசாரணையின்போதும் நீதிபதி உதித் சூர்யா வழக்கில் அவரின் தந்தைதான் வில்லன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x