Published : 17 Oct 2019 11:47 AM
Last Updated : 17 Oct 2019 11:47 AM

முதுநிலை மருத்துவப் படிப்பு: அகில இந்திய இடங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.17) வெளியிட்ட அறிக்கையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள 50% முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இந்த ஆண்டும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. தவறான புரிதலின்கீழ் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

2020-21ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதியும், முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் டிசம்பர் 20 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இவற்றில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் எல்லாம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொருந்தும். இது மிகவும் அபத்தமான, மிகவும் அநீதியான கொள்கை ஆகும். இது உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மொத்தம் 6,228 முதுநிலை பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 1,352 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் 50% இடங்கள், அதாவது 676 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். அதேபோல், நாடு முழுவதும் மொத்தம் 23,729 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 18,000 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சொந்தமானவை என்பதால், அவற்றில் 50%, அதாவது சுமார் 9,000 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.

2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2009 ஆம் ஆண்டு முதல் முழுமையான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி, மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், சட்டத்தின் பெயரே மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் என்று இருப்பதால், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்; அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரிவுகளை குதர்க்கமாகப் புரிந்துகொண்டது தான் இதற்குக் காரணமாகும். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கும், எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் 10% இட ஒதுக்கீடு பெற்ற உயர்வகுப்பு ஏழைகளுக்கும் அனைத்து வகை ஒதுக்கீட்டு இடங்களிலும் முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும், அந்த உரிமையை மறுப்பது சமூக நீதியைக் கொடூரமான முறையில் படுகொலை செய்வதற்குச் சமமானது ஆகும்.

மத்திய சுகாதாரத்துறை நிறுவனங்களின் இந்த விசித்திரமான நிலைப்பாடு காரணமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2,430 மருத்துவ மேற்படிப்பு இடங்களும், 183 பல்மருத்துவ மேற்படிப்பு இடங்களும் பறிக்கப்படுகின்றன.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் 2006 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரிடம் மிகக்கடுமையாக சண்டையிட்டு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்தேன். போராடிப் பெற்ற 27% இட ஒதுக்கீடு சிதைக்கப்பட்டு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து பறிக்கப்படுவது அந்த இட ஒதுக்கீட்டுக்காக போராடியவன் என்ற முறையில் என்னைக் காயப்படுத்தியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததும் வருத்தமளிக்கிறது. மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை, அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு கருதினால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகப் பெறப்படும் இடங்களை அந்தந்த மாநிலங்களிடமே திருப்பி வழங்கி, அங்குள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் அதிக மருத்துவ மேற்படிப்பு இடங்களைக் கொண்ட தமிழகம் பயனடையும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x