

புதுச்சேரி
ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது திமுகவும் காங்கிரஸும்தான். அதனை வேடிக்கை பார்த்தவர்கள் அதிமுகவும் பாஜகவும்தான் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவிணா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (அக்.16) சாரம் அவ்வை திடலில் பேசியதாவது:
"ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நான் பேசியதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். முதலில் காங்கிரஸ் கட்சிக்கு, தலைவரைத் தேர்வு செய்துவிட்டு எனக்கு எதிராகப் போராடட்டும். நான் ஒருபோதும் இதிலிருந்து பின்வாங்க மாட்டேன். கைது செய்யும்போது கதறும் கூட்டமல்ல நாங்கள். ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது திமுகவும் காங்கிரஸும்தான். அதனை வேடிக்கை பார்த்தவர்கள் அதிமுகவும் பாஜகவும்தான்.
ஈழத்தில் ஒரு இனமே கண்முன் அழிந்தபோது அதனை மீட்டெடுக்க வேண்டியவர்கள் அதனைச் செய்யாமல் விட்டதைப் பேசாமல் வேறு எதைப் பேச முடியும். நாங்கள் வாக்கு கேட்டு வரவில்லை. உரிமையைக் கேட்டுதான் வருகிறோம். பதவிக்கு வருவதோ, தேர்தல் வெற்றியோ எங்களுக்கு முக்கியம் கிடையாது.
இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த 3 ஆண்டுகாலம் இருண்ட காலம். அப்போது பல கொடுமைகள் நடந்தன. அதையொட்டிதான் ராஜீவ் காந்தி மரணம் நடைபெற்றது. ராஜீவ் காந்தி மரணத்தைக் காரணம் காட்டி அங்கிருந்த மொத்த தமிழ் இனத்தையும் அழித்தனர். இந்தியா விரும்பிய போரையே இலங்கை செய்தது. பழைய வரலாறை நான் இளைஞர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். இது தொடக்கம்தான். கடந்த 2009-ல் காங்கிரஸுக்கு எதிராக நாங்கள் போராடினோம். 2019-ல் எங்களுக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது. மக்கள் பிரச்சினைக்கு இதுவரை போராடாத காங்கிரஸ் தற்போது எங்களை எதிர்த்துப் போராடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டிதான் காரணம். அதனை முதலில் கொண்டு வந்ததே காங்கிரஸ் - திமுகதான். இதுபோல பல திட்டங்களும் அவர்கள்தான் கொண்டு வந்தனர்.
புதுவை முதல்வரால் ஏன் தனி மாநில உரிமையைப் பெற முடியவில்லை? எங்களுக்கு மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமையே தேவை. நாங்கள் அனைத்து உயிர்களுக்குமான அரசியலைத்தான் பேசுகிறோம். ஆனால் எங்களை பாசிஸ்ட் என்று கூறி ஒதுக்குவது எடுபடாது. வருகிற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். அது எங்களுடைய ஆட்டமாகத்தான் இருக்கும். நாங்கள் தனித்துதான் செயல்படுவோம். நாங்கள் தோற்றாலும் எங்களது சொந்தங்களிடம்தான் தோற்றோம் என்று பெருமையாக நினைப்போம்.
நாங்கள் எப்படி கல்வித் திட்டங்களைக் கொண்டு வருவோம், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்பதைக் காணொலி மூலமாக விரைவில் வெளியிடுவோம். நாங்கள் ஏற்கெனவே 4 தலைநகரங்கள் கொண்டு வருவோம். போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்போம் என்று கூறியிருந்தேன். அதனை எல்லோரும் கேலி செய்தனர். தற்போது இத்திட்டங்களை ஆந்திர மாநில முதல்வர் அறிவித்ததும் வரவேற்கின்றனர். பலரும் எங்களது திட்டங்களைத்தான் காப்பி அடிக்கிறார்கள். அதனால்தான் விரைவில் காணொலி மூலம் திட்டங்களை வெளியிடுவோம்".
இவ்வாறு சீமான் பேசினார்.
செ.ஞானபிரகாஷ்