

திருச்சி
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக, முருகனை விரைவில் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் தெரிவித்தார்.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34) கைது செய்யப் பட்டார். கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன்(45) அக். 11-ம் தேதி பெங்களூரூ 11-வது சிவில் சிட்டி நீதிமன்றத்திலும், அவரது சகோதரி மகன் சுரேஷ்(28) அக்.10-ம் தேதி செங்கம் நீதி மன்றத்திலும் சரணடைந்தனர்.
பெங்களூரூ போலீஸார், திருச்சி போலீஸாருடன் இணைந்து திருச்சியில் காவிரி ஆற்றங்கரை யில் முருகன் புதைத்து வைத் திருந்த 12 கிலோ தங்க, வைர நகை களை அக்.12-ம் தேதி கைப்பற்றி னர். பின்னர் முருகனை பெங்களூரு வுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளையில் முருகன், சுரேஷ், கணேசன் ஆகிய 3 பேர் தான் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். பலமுறை இந்த கடைக்கு வந்து நோட்டமிட்டு, இங்கு கொள்ளை யடித்தால் எளிதில் தப்பித்துவிட லாம் என்ற முடிவுக்கு வந்த பிறகே குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். சுவரின் பக்கவாட்டில் ஒரே நாளில் துளையிடாமல் சுமார் 4, 5 நாட்கள் இரவு நேரத்தில் கொஞ்சம், கொஞ்சமாக துளையிட்டுள்ளனர். இதைக் கடையின் காவலர்கள் கண்காணிக்காமல் இருந்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் முருகன், சுரேஷ் உள்ளிட்டோர் இங்கு மட்டுமின்றி சமயபுரம் நெ.1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு போலீஸாரின் விசாரணை முடிந்த பிறகு, முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளோம். இதற்காக திருச்சி ஜே.எம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளோம்.
எங்களின் விசாரணைக்கு பெங்களூரு போலீஸார் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அவர்களும் சட்டப்படியே முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.