

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிவுகளை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
‘நிதி ஆயோக்’ குழுவின் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள் ளார். அதில், ‘பல்வேறு அலுவல்கள் காரணமாக டெல்லியில் தங்கள் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. ஆகவே, எனது உரையை அனுப்பி யுள்ளேன். நிலம் கையகப் படுத்துவதில் வெளிப்படையான மற்றும் நியாயமான இழப்பீட்டு உரிமை குறித்த தமிழக அரசின் கருத்துக்களை எனது உரையில் கூறியுள்ளேன். இந்த கருத்துகளை மத்திய அரசு பரிசீலிக்கும் என நம்புகிறேன்’ என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் உரை
‘நிதி ஆயோக்’ கூட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய உரையில் கூறியிருப்பதாவது:
கடந்த 1894-ம் ஆண்டைய ஆங்கிலேய ஆட்சிக்கால நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட 2011-ம் ஆண்டு மசோதா, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாக உள்ளதை ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம். நிலங் களை நிர்வாக ரீதியாக மாநில அரசுகளே கையாள்கின்றன. எனவே, நிலம் தொடர்பாக சட்டம் இயற்றுவதை மாநில அரசுகளிடமே விட்டுவிட வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
திருத்த மசோதாவில் 10-ஏ என்ற புதிய பிரிவு இடம் பெற்றுள்ளது. அதில், பாதுகாப்பு மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி, மின்மய மாக்கம், ஏழைகளுக்கு வீட்டு வசதி, தனியார் - அரசு பங்களிப்பில் உருவாகும் திட்டங்களுக்கான நில உரிமை அரசைச் சேர்ந்தது என உள்ளது.
திருத்த மசோதாவில் தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பிரிவு இடம் பெறக் கூடாது என்ற எங்கள் யோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதனால்தான், கடந்த மார்ச் 10-ம் தேதி மக்களவையில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தபோது, அதிமுக ஆதரவாக வாக்களித்தது.
இந்தச் சட்டத்தின் 3-வது அத்தி யாய பிரிவுகளை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். அதனால், அந்தப் பிரிவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய திருத்தங்கள் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் தேவைகளை பாதிக்கும் என்பதால் அவற்றை வலியுறுத்த வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
சட்டம் இறுதி வடிவம் பெற்ற பிறகுதான், விதிமுறைகளை வகுப்பதும் அதுதொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதும் சரியாக இருக்கும். எனவே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு மற்றும் உத்தேச சட்ட திருத்தங் களையும் மத்திய அரசு உரிய முறையில் ஆலோசித்து பொதுமக் களின் கருத்துகள், உணர்வுகளை மதிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.