Published : 17 Oct 2019 10:27 AM
Last Updated : 17 Oct 2019 10:27 AM

பருவமழைக் காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்: மின் வாரிய அதிகாரி விளக்கம்

திருநெல்வேலி

பருவமழைக் காலத்தில் மின் விபத்துகளைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து திருநெல்வேலி மண்டல மின் வாரிய தலைமைப் பொறியாளர் கி.செல்வகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காற்று, மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்லக் கூடாது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இடி, மின்னலின்போது வெட்டவெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அடியிலோ நிற்கக் கூடாது. இடி, மின்னலின்போது டிவி, மிக்ஸி, கணினி, கைபேசி, தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது.

மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள், மின் கம்பங்கள் அருகில் தண்ணீர் தேங்கிக் கிடந்தால் மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அருகில் செல்லக் கூடாது.

ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர், மின் மோட்டார்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை பயன்படுத்த வேண்டும். பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை அணைக்க வேண்டும்.

பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின் கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிர்வு பெட்டிகள் போன்றவை குறித்து படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 89033 31912 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x