

நாகப்பட்டினம்
மகேந்திரப்பள்ளியில் கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் வராததால், கருகும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும், நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான கொள்ளிடம் பகுதிகளின் கிளை வாய்க்கால்களில் இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.
அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக தங்கள் வயல்களில் உழவுப் பணியை மேற்கொண்ட சில விவசாயிகள், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், நேரடி விதைப்பு செய்து உள்ளனர். இனி மழை பெய்தால் மட்டுமே நேரடி விதைப்பு செய்த நெல்மணிகள் முளைத்து வளரும் என்ற நிலை உள்ளது.
பிரதான வாய்க்கால்களில் மட்டும் தண்ணீர் வந்துள்ள நிலையில், கொள்ளிடம் கடைமடைப் பகுதியான மகேந்திரப்பள்ளி, காட்டூர், செம்மங்குடி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு பாசன வசதி தரும் கோட்டை வாய்க்கால், பெரிய வாய்க்கால், தைத்தான் வாய்க்கால், குழாயடி வாய்க்கால், செம்மங்குடி வாய்க்கால் உட்பட இப்பகுதியில் உள்ள அனைத்து கிளை வாய்க்கால்களும் தூர் வாரப்படாததால், தண்ணீர் இதுவரை வந்துசேரவில்லை.
மகேந்திரப்பள்ளி ஊராட்சியில் மட்டும் 600 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் காவிரி நீரை நம்பி சம்பா நெல் நேரடி விதைப்பு செய்துள்ளனர்.
ஆனால், இன்னும் தண்ணீர் வந்துசேராததால், 600 ஹெக்டேர் பயிர்களும் கருகி வருகின்றன. மீதியுள்ள வயல்களும் தண்ணீரின்றி காய்ந்து வெடித்துக் காணப்படுகின்றன.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கிளை வாய்க்கால்களை தூர் வார நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கிளை வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர் வாரி, தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.