Published : 17 Oct 2019 10:14 AM
Last Updated : 17 Oct 2019 10:14 AM

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: மத்திய அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்/நாமக்கல்

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப் பட்ட ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பொது முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித் தார். இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு மிகவும் நெருக்கடியில் உள்ளது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, ஜிஎஸ்டியை அமல்படுத்தியது ஆகியவற்றால், சிறுதொழில்கள் மட்டுமல்ல, பெரிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்ந்துள்ளது..

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுத்தி வந்த பல திட்டங்களை இந்த அரசு வேண்டுமென்றே நிராகரித்து வருகிறது. குறிப்பாக, வேலையில்லா உறுதி திட்டத்தை, சீர்குலைக்கும் வகையில், மத்திய அரசு அதற்கு நிதி ஒதுக்குவது இல்லை. பல மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 21-ல் இருந்து 12 வங்கிகளாக குறைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறை படிப்படியாக தனியார் மயமாக்கப்படுகிறது. ஏர் இந்தியா, இன்சூரன்ஸ் நிறு வனங்கள் போன்றவையும் தனி யாருக்கு தாரை வார்க்கப்படுகின் றன. மத்திய அரசு பின்பற்றி வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இதேபோல், நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எஸ்.கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, பிஎஸ்என்எல், ஏர் இந்தியா ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் என். தம்பிராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் பி. ஜெயமணி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.பெரியசாமி, மாவட்ட, மாநில நிர்வாகிகள எஸ்.பாலா, ஏ.ரங்கசாமி, எஸ்.மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x