

தூத்துக்குடி
தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தைப் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், " 'அசுரன்' படம் அல்ல பாடம்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பூமணியின் வெக்கை புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் நல்ல வரவேறைப் பெற்றது. குறிப்பாக 48 வயது நபரின் தோற்றத்தை தனது நடிப்பில் வெளிப்படுத்திய தனுஷ் பாராட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில், நாங்குநேரியில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நடிகர் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தைப் பார்த்தனர்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'அசுரன்' படம் மட்டும் அல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்.
கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்" எனப் பதிவிட்டுள்ளார்.