

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 11-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், குழந்தைகளை இழந்த பெற்றோர், அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதில் குழந்தை களை இழந்த பெற்றோர் புகைப் படங்களைப் பார்த்து கதறி அழுதது அனைவரையும் நெஞ்சுருக வைத்தது.
கடந்த 2004 ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்ட ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படு காயமடைந்தனர்.
இந்த விபத்தின் 11-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த குடும்பத்தினர் சார்பில் நினை வஞ்சலிக் கூட்டமும், பாலக்கரை யில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பள்ளி முன் 94 குழந்தைகளின் உருவப் படங்களுடன் கூடிய ஃபிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந் தது. அங்கு மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
தொடர்ந்து, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத் தினர். தீ விபத்தில் நண்பர்களையும், தோழிகளையும் இழந்த மாணவ, மாணவிகள் அழுதுகொண்டே அஞ்சலி செலுத்தினர். பின்னர், குழந்தைகளின் குடும்பத்தினர் பள்ளியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்துக்குச் சென்று, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, குழந்தைகளை இழந்த பெற்றோர் குழந்தைகளுக் குப் பிடித்த தின்பண்டங்கள், புத் தாடைகளை வைத்து வழிபட்டனர். கல்லறை களிலும் படையல் வைத்தனர். பின் னர் மகாமக குளத்தில் மோட்சதீபம் ஏற்றினர்.
குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக நியமிக் கப்பட்ட, ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடராமன் பள்ளி முன் அஞ்சலி செலுத்தினார்.