Published : 16 Oct 2019 21:47 pm

Updated : 16 Oct 2019 21:47 pm

 

Published : 16 Oct 2019 09:47 PM
Last Updated : 16 Oct 2019 09:47 PM

ஸ்டாலின் மிசா கைதி இல்லையா?- தனியார் தொலைக்காட்சிக்கு டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்

is-stalin-is-not-a-misa-prisoner-tks-elangovan-condemns-private-television

சென்னை

முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் தொலைக்காட்சி செய்தியாளர் ஒரு புத்தகத்தை ஆதாரமாக காட்டி ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என கேட்க அதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தொலைக்காட்சி செய்தியாளர் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் கைதானாரே தவிர மிசா கைதியாக சிறையில் அடைக்கப்படவில்லை என்று கூறி ஒரு புத்தகத்தை ஆதாரமாக காட்டியுள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்த திமுக தரப்பு சார்பாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்து மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை:

முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் “நேர்காணல்” ஒன்றை எடுத்து - அதில் “எமெர்ஜென்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை” என்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க தனியார் தொலைக்காட்சி முயற்சி செய்திருப்பதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிக்கை சுதந்திரத்தை பாழ்படுத்தும் நோக்கில்- தங்களது டி.வி. சார்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறோம் என்று இறங்கி, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக திமுக தனது ஆட்சியையும் இழந்து நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை கொச்சைப்படுத்த முயன்றிருப்பது அருவருக்கத்தக்கது.

நெருக்கடி நிலைமை அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷா அவர்களின் ஆணையம் முக்கியமாக அப்போது பிரதமராக இருந்த மறைந்த இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு நேரடியாக செய்த அதிகார துஷ்பிரயோகம் பற்றிய குறிப்பிட்ட புகார்களை (Specific Allegations) விசாரித்தது.

அந்த அறிக்கை காணாமல் போய் விட்டது என்ற காரணத்தை முன் வைத்து இரா. செழியன் “Shah Commission of Inquiry- Lost and Regained” என்று ஒரு தொகுப்பை வெளியிட்டார். அப்படி வெளியிடப்பட்ட அந்த கமிஷன் அறிக்கையில் உள்ள மூன்றாவது மற்றும் இறுதி பகுதியின் பக்கம் 42-ல் “நெருக்கடி நிலைமையின் போது மிசாவின் கடுமையான தொடர் தாக்குதலுக்கு உள்ளானது திமுக, அக்கட்சியைச் சேர்ந்த 400 பேருக்கு மேல் மிசாவில் கைது செய்யப்பட்டார்கள்.” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொரு பெயரையும் மாநில வாரியாக அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதைக் கூட படித்து அறிந்து கொள்ளாத அந்த நிருபர், வேண்டுமென்றே திமுகவின் ஜனநாயகத்திற்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் தலைவர் மிசாவில் கைது செய்யப்பட்டதையே இழிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடுமையான கண்டத்திற்குரியது.

மிசா காலத்தில் ஒருவரை மிசா சட்டத்தில்தான் கைது செய்வார்களே தவிர, “பொடா” சட்டத்திலா கைது செய்வார்கள்? இதுகூட தெரிந்து கொள்ளாத அவரெல்லாம் ஒரு நிருபரா? “பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் குறிப்பிட்டிருக்கும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் மிசாவில் கைதானார் என்று குறிப்பிடப்படவில்லையே” என்று அந்த நிருபர் விதண்டாவாதமாக ஒரு கேள்வியை எழுப்பியதில் அவரது உள்நோக்கமும், எந்த எஜமானர்களுக்காக அந்த கேள்வியை எழுப்பினார் என்பதும் புரிகிறது. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட வேண்டிய “மீடியா” ஒன்று இப்படி “Made in BJP”ஆக மாறுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

அந்த நிருபர் சுட்டிக்காட்டிய அதே புத்தகத்தின் பக்கம் 107-ல் மாநில வாரியாக கைது செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரங்களை வெளியிடும் போது “தமிழ்நாடு” என்று குறிப்பிட்டு, “அரசியல் கைதிகளில் மிசாவின்கீழ் அதிகமாக கைது செய்யப்பட்டது திமுக மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் என்றும், அப்படி கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 பேர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைவிட மிசா கொடுமைக்குள்ளானது திமுகவும், அதன் தலைவர்கள்தான் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்? ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையில் திமுகவினருக்கு நேர்ந்த மிசா சிறைக் கொடுமைகள் - அடக்குமுறைகள் குறித்து விசாரிக்க நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஒரு தனி விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது என்பதைக்கூட மறந்து இப்படியொரு உள்நோக்கம் கற்பிக்கும் பிரச்சாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது வருத்தத்திற்குரியது.

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலைமையை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் போட்ட திமுகவையும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க மிசா உள்ளிட்ட கொடுமையான சிறைவாசத்தை அனுபவித்து- சித்திரைவதைக்குள்ளான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கட்சி முன்னோடிகளின் “மிசா வரலாற்றையும்” மறைக்க முயலும் புல்லுருவிகள் வரலாறு தெரியாத அப்பாவிகள். ஜனநாயகத்தை காக்க நடைபெற்ற போராட்டம் என்னவென்றே அறியாத பச்சிளங்குழந்தைகள்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க.வின் சார்பில் மாவட்ட ரீதியாக மிசாவில் கைது செய்யப்பட்ட கட்சி சிப்பாய்களின் பெயர்களையும் யாரேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலை பதிவேடுகளை தாராளமாக படித்து தெரிந்து கொள்ளலாம். முக்கிய வரலாற்று சம்பவம் குறித்து பேட்டி எடுக்கும் முன்பு அந்த டிவி நிருபரோ அல்லது அந்த நிருபருக்கு இப்படி பேட்டி எடுக்கச் சொன்னவரோ அந்த பயிற்சியில் ஈடுபடலாம்.

அப்படியும் முடியாவிட்டால் தலைவர் கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி” இரண்டாம் பாகத்தின் 527 முதல் 531 வரையுள்ள பக்கங்களை படித்துப் பார்த்தால் - சென்னை மாவட்டத்தின் மிசா பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டிருப்பதையும், நெருக்கடி நிலைமை அமலில் இருந்த போது மிசாவில் கைது செய்யப்பட்ட அனைத்து திமுகவினரின் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

அதை விடுத்து “அரை வேக்காட்டு” தகவல்களை கையில் வைத்துக் கொண்டு - “ஆசைப்பட்ட கட்சிக்கு பிரச்சாரம்” செய்வதை தனியார் தொலைக்காட்சி ஈடுபடுவது பத்திரிக்கை சுதந்திரத்தை சுயநலத்திற்கு பயன்படுத்தும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”.

இவ்வாறு டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

StalinNot a Misa Prisoner?TKS ElangovanCondemnsPrivate televisionMisaArrestஸ்டாலின்மிசா கைதி இல்லையா?தனியார் தொலைக்காட்சிடி.கே.எஸ் இளங்கோவன்கண்டனம்திமுகமிசா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author