

புதுச்சேரி
காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுக்கூட்டத்தில் இன்று இரவு சீமான் பேசுகிறார். இச்சூழலில் ராஜீவ் காந்தி கொலை குறித்துப் பேசியதை, திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சீமானுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் இன்று (அக்.16) இரவு புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பிரவீணாவை ஆதரித்து அவ்வைத்திடலில் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச உள்ளார்.
இந்நிலையில் இத்தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் நாராயணசாமி. சீமான் வருகை தொடர்பாக கேட்டதற்கு, "மரியாதைக்குரிய என அவரைக் கூறவே கஷ்டமாக இருக்கிறது. மறைந்த ராஜீவ் காந்தியை தரக்குறைவாக சீமான் பேசியுள்ளார். அரசியல் கட்சியினரை விமர்சிப்பதுதான் அவர் தொழில். தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார். சீமான் ராஜீவ் காந்தி கொலை பற்றிப் பேசிய கருத்தைத் திரும்பப் பெற்று மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் அவரை எதிர்த்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்," என்று நாராயணசாமி தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்