Published : 16 Oct 2019 05:12 PM
Last Updated : 16 Oct 2019 05:12 PM

புதுச்சேரியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யாதது ஏன்? - கேள்வி எழுப்பிய நாராயணசாமி; திமுகவின் கிளைக்கழகமே புதுச்சேரி காங்கிரஸ் என அதிமுக பதில்

பிரச்சாரத்தில் ஈடுபடும் ரங்கசாமி

புதுச்சேரி

காமராஜர் நகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ள சூழலில் தமிழக துணை முதல்வர் புதுச்சேரியில் பிரச்சாரம் செய்யாதது ஏன் என்று முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு வராமல் மு.க.ஸ்டாலின் வருவது திமுகவின் கிளைக்கழகமாக புதுச்சேரி காங்கிரஸ் உள்ளதாக அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ பதில் தந்துள்ளார்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி வீடு வீடாகச் சென்று இன்று (அக்.16) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரத்துக்கு புதுச்சேரி வருகிறார். அதே நேரத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுச்சேரி வந்தார். ஆனால் அவர் புதுச்சேரி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுக்குப் பிரச்சாரம் செய்யவில்லை.

என்.ஆர்.காங்கிரஸை அதிமுக புறக்கணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கடந்த காலங்களைப் பார்க்கும்போது ஜெயலலிதா, ரங்கசாமியுடன் கடந்த 2011-ல் கூட்டணி அமைத்தார். தேர்தலில் வென்றதும் ரங்கசாமி ஆட்சியமைக்கும் போது அதிமுகவைப் புறக்கணித்து ஆட்சி அமைத்தார். அப்போது ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார். நாங்கள் அனைத்துக் கட்சிகளும் இணைந்து வாக்கு கேட்கிறோம். ரங்கசாமி தனித்து விடப்பட்டுள்ளார்," என்று நாராயணசாமி தெரிவித்தார்.

திமுகவின் கிளைக்கழகமே புதுச்சேரி காங்கிரஸ் - அதிமுக பதில்

இதுதொடர்பாக புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து இன்று சங்கரதாஸ் நகர், தேவகி நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்துதான் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தனர். தொகுதி ஒதுக்கீட்டையும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் ஒப்படைத்தார்கள். இதுகூடத் தெரியாமல் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக இருக்கிறதா என முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்புகின்றார்.

காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சோனியா, ராகுல், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பிரச்சாரத்துக்கு வரவில்லை. இவர்களே வராத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஏன் அழைத்து வருகிறார்கள்? ஏனெனில் புதுச்சேரி காங்கிரஸ் திமுகவின் கிளைக்கழகம் போல் மாறியுள்ளது. இங்குள்ள காங்கிரஸ் கட்சிக்குப் பதில் சொல்ல புதுச்சேரியில் உள்ள தலைவர்களே போதுமானவர்கள். தமிழகத் தலைவர்கள் வந்து பதில் சொல்லக்கூடிய அளவுக்கு புதுச்சேரி காங்கிரஸில் பெரிய தலைவர்கள் யாருமில்லை," என்று தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x