Published : 16 Oct 2019 04:19 PM
Last Updated : 16 Oct 2019 04:19 PM

உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசா நாணயம் கொண்டுவந்தவர்களுக்கு அரை ப்ளேட் பிரியாணி: திண்டுக்கல் கடையில் குவிந்த கூட்டம்

திண்டுக்கல்லில் 5 பைசா நாணயத்திற்கு அரைபிளேட் பிரியாணி வழங்கிய கடைமுன் குவிந்த கூட்டம்.

திண்டுக்கல்

உலக உணவு தினத்தை முன்னிட்டு பழைய 5 பைசா நாணயம் கொண்டுவந்தவர்களுக்கு அரை ப்ளேட் பிரியாணி வழங்கி திண்டுக்கல்லில் உள்ள தனியார் பிரியாணி கடை நிர்வாகம் மக்களை ஆச்சரியப்படுத்தியது.

திண்டுக்கல் என்றாலே பூட்டு என்று இருந்தகாலத்தை, தற்போது திண்டுக்கல் என்றாலே பிரியாணி என்றநிலை காலப்போக்கில் மாறிவருகிறது.

திண்டுக்கல்லில் இளம் ஆடு, சீரகசம்பா அரிசி, விறகு அடுப்பில் சமைப்பது, சமைத்தபின் தம் போடுவது என பல சிறப்புக்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணியை விரும்பி உண்ண ஒரு கூட்டமே உள்ளது.

பல பகுதிகளில் இருந்தும் பயணம் செய்பவர்கள் திண்டுக்கல்லை கடந்து செல்லும்போது பெரும்பாலோனோர் பிரியாணியை ருசிக்காமல் செல்வதில்லை. அந்த அளவிற்கு திண்டுக்கல் பிரியாணி பலரின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 16-ம் தேதியான இன்று உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

இதை சிறப்பிக்கும்விதமாக திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ள முஜிப் பிரியாணி என்ற கடையில் ஐந்து பைசா நாணயத்தை கொண்டுவந்து அரை பிளேட் பிரியாணி பெற்றுச்செல்லலாம் என்ற அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இன்று காலை கடை திறந்தவுடன் கூட்டம் அலைமோதியது.

பழைய 5 பைசா நாணயத்தை வைத்துக்கொண்டு பலரும் நீண்டவரிசையில் காத்திருக்க தொடங்கினர். முதலில் வந்த 100 பேருக்கு அரை ப்ளேட் பிரியாணி 5 பைசாவிற்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து பிரியாணி வாங்க வந்த பாக்கியராஜ் என்பவர், "5 பைசாவிற்கு பிரியாணி அறிவிப்பைக் கண்டதும் முதல்நாளே நமக்கு தெரியாமல் நாமே எங்கேனும் 5 பைசா நாணயத்தை வைத்துள்ளோமா என வீட்டில் தேடத்தொடங்கினேன்.

இரண்டு 5 பைசா நாணயங்கள் கிடைத்தது. நானும் எனது மனைவியும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம். இரண்டு அரை ப்ளேட் பிரியாணி எங்களுக்குக் கிடைத்தது" என்றார் மகிழ்ச்சியாக.

பழைய ஐந்து பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணி வாங்கிய மகிழ்ச்சியில் பாக்கியராஜ் தம்பதி

கடை உரிமையாளர் ஷேக்முஜிபுர் ரகுமான், "கீழடியில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் எவ்வளவு முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறதோ, அதேபோல் இனிவரும் தலைமுறைக்கு நாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நாணயங்கள் பயனுள்ளதாகவும், நம் வரலாறு சொல்லும் விதமாகவும் இருக்கவேண்டும்.

இதற்காக எங்கள் தொழில் மூலம் ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் இந்த 5 பைசா நாணய பிரியாணி யோசனை தோன்றியது. 5 பைசா நாணயத்திற்கு தற்போது மதிப்பில்லை என்று நினைத்திருந்தவர்களுக்கு இன்று ரூ.149 மதிப்பிலான அரை பிளேட் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. பலரும் தங்களிடமிருந்த 5 பைசா நாணயத்தை கொண்டுவந்து அரைபிளேட் பிரியாணி பெற்றுச்சென்றது எங்களுக்கும், பிரியாணி வாங்கிச்சென்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் உலக உணவு தினத்தில் இதை செய்ததை சிறப்பாக கருதுகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x