Published : 16 Oct 2019 04:12 PM
Last Updated : 16 Oct 2019 04:12 PM

இடி, மின்னல் காரணமாக உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

இடி, மின்னல் காரணமாக உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.16) வெளியிட்ட அறிக்கையில், "2019 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் 23.9.2019 அன்று நடைபெற்றது.

இன்றிலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய காரணத்தினால், அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் கிராமத்தில் நேற்று இடி தாக்கியதில், வைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி, விஜயா, கலைச்செல்வி மற்றும் லட்சுமியம்மாள் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியையும். பெரம்பலூர் மாவட்டம், க.எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், காஞ்சிபுரம் மாவட்டம், நசரத்பேட்டை கிராமத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த களியனூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இடி, மின்னல் காரணமாக உயிரிழந்த மேற்கண்ட ஆறு நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்," என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x