Published : 16 Oct 2019 04:00 PM
Last Updated : 16 Oct 2019 04:00 PM

அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு அதிமுகவை மீட்டெடுத்தே தீருவோம்: தினகரன் உறுதி

சென்னை

அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு அதிமுகவை மீட்டெடுத்தே தீருவோம் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (அக்.16) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "பெரியாரின் வழியில், அண்ணா ஆரம்பித்த இயக்கத்தை சுயநலம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தீய சக்திகள் திசை மாற்றிக்கொண்டு சென்றபோது, அவர்களிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, எம்ஜிஆர் 1972, அக்டோபர் 17 அன்று அதிமுக எனும் இயக்கத்தை உருவாக்கினார். அன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தீயசக்திகள் கொடுத்த அத்தனை இன்னல்களையும், இடையூறுகளையும், தொண்டர் பலத்தோடு எதிர்த்து நின்று மக்களின் மனங்களை வென்று காட்டி இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

எம்ஜிஆர் இருந்தவரை எதுவுமே செய்ய முடியாதவர்கள், அவருக்குப் பிறகு அதிமுக அவ்வளவுதான் என மனப்பால் குடித்தனர். அவர்களின் கனவைப் பொய்யாக்கி, தொண்டர்களின் தலைவியாக எழுந்து, தமிழ்நாட்டு மக்களின் தாயாக உயர்ந்த ஜெயலலிதா, அண்ணா பெயரிலான இயக்கத்தை நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றிக் காட்டினார்.

ஜெயலலலிதா மறைந்து மீண்டும் இருள் சூழ்ந்தபோது, ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியையும், அவர் கட்டிக் காப்பாற்றிய இயக்கத்தையும் சசிகலா சேதாரமின்றி காப்பாற்றினார். தன் சொந்த நலன் பாராது தமிழ்நாட்டின் நலனை மனதில் வைத்து ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தார்.

ஆனால், துரோகமே வடிவானவர்கள், ஆட்சியையும், கட்சியையும் தங்களின் சுய லாபத்திற்காக அடகு வைத்து, சிங்கமென நிமிர்ந்து நின்று, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜெயலலிதாவின் புகழுக்கும், பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள். ஜெயலலிதா தமிழக மக்களின் நலன் கருதி எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் தங்களின் சுயநலத்திற்காக தலைவாசலைத் திறந்துவிட்டு தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்தார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் ஜெயலலிதாவின் இயக்கத்தையும், அவர் போற்றிப் பாதுகாத்த தமிழ்நாட்டின் நலன்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்முடைய கைகளில் வழங்கியது.

லட்சோபலட்சம் தொண்டர்களுடைய உள்ளக் குமுறலின் வெளிப்பாடாக, ஜெயலலிதாவின் பெயரையும், உருவத்தையும் தாங்கிய அமமுக எனும் இயக்கத்தை, சட்டத்தின் வழி நின்று போராடுவதற்கான ஜனநாயக ஆயுதமாக உருவாக்கினோம். அந்தப் பயணத்தில் ஒரு பக்கம் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் துரோகம் இழைத்த துரோகிகள். இன்னொரு புறம், நமக்கும் மட்டுமல்ல; தமிழக மக்களுக்கும் நிரந்தர எதிரிகளான திமுக உள்ளிட்ட தீய சக்திகள். இவர்களை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுக்கும் நம்முடைய புனிதமான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இடையில் சந்தித்த தேர்தலில் நமக்கு எதிராகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின்னடைவைச் சந்தித்தோம். அதைப் பயன்படுத்தி நம்மை மொத்தமாக வீழ்த்திவிடலாம் என்று சிலர் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். மிட்டாய் காட்டி குழந்தைகளைப் பிடிப்பது போல நம்மிடம் இருந்த சில பலவீனர்களைப் பிடித்துச் சென்று, 'இந்த இயக்கம் அவ்வளவுதான்' என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் பின்னடைவைச் சந்திக்காத இயக்கமோ, தலைவர்களோ உலகில் இல்லை. வாழ்நாள் முழுக்க தீயசக்திகளால் அசைத்துக் கூட பார்க்க முடியாத எம்ஜிஆர், 1980 தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தபோது உடனிருந்த சிலர் சுயலாபத்திற்காக ஓடிப்போனார்கள். 1996-ல் ஜெயலலிதா பின்னடைவைச் சந்தித்தபோது சுயநலத்தோடு உடனிருந்த சிலர் அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளைப் போல பறந்து போனார்கள். ஆனால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தொண்டர்களின் பலத்தோடு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து நின்றதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

எப்போதுமே சுயநலம்மிக்க சில தனி நபர்களை நம்பி நம்முடைய இயக்கம் இருந்ததில்லை. உண்மையான உணர்வும், வழி வழியாக தீய சக்திகளுக்கு எதிரான ரத்தம் உடலில் ஓடுகிற நெஞ்சுரமும் கொண்ட தொண்டர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் வழி நடத்தப்படுகிற இந்த இயக்கத்தை, அற்ப ஆசைகளுக்காக தாவியோடுகிற யாரோ சிலரின் துரோகத்தால் எதுவும் செய்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால், அதன்பிறகுதான் இயக்கம் மேலும் தூய்மையடைந்திருக்கிறது.

ஏகாதிபத்திய சக்திகள் அளிக்கின்ற பொம்மை அதிகாரம் போன பிறகு துரோகிகளை அண்டி நிற்பதற்கு அவர்களின் நிழல் கூடத் தயங்கும். அந்த நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்படி நடக்கும்போது, சத்தியத்தின் வலிமையை உலகுக்கு நிரூபித்த தர்மத்தாயின் பிள்ளைகளாக நாம் ஒளிரப்போகிறோம்.

துரோகிகள் கொடுத்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஜெயலலிதாவால் அடக்கப்பட்ட தீயசக்தியின் நவீன வடிவம், எப்படியாவது பதவியில் வந்து உட்கார்ந்துவிடத் துடிக்கிறது. இயக்கத்திற்காக என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டு நலனுக்காக தீயசக்தி கூட்டத்தின் கெட்ட கனவைப் பலிக்க விடாமல் செய்ய வேண்டிய கடமையும் நம்முடைய கரங்களில் இருக்கிறது என்பதை அமமுக தொண்டர்கள் ஒரு கணமும் மறந்திடலாகாது.

ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்கள் கட்டிக்காத்த மக்கள் நலக் கொள்கைகளை வாழ்விப்பதற்கும் அண்ணாவின் பெயரால், எம்ஜிஆர் இயக்கம் கண்ட இந்நாளில் உறுதி ஏற்போம். இந்த உறுதிமொழி நம் இயக்கத்திற்கானது மட்டுமல்ல; அடுத்த தலைமுறைக்கானது! ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கானது" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x