

சென்னை
விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக தலைவர் வரும் 19-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக முத்தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக சார்பாக புகழேந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக நாராயணன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இரு தொகுதிகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கியத் தலைவர்களும், அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட பல தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகி, ஓய்வெடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வரும் 19-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம், இன்று (அக்.16) வெளியிட்ட அறிவிப்பில், "நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 19-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.