

சென்னை
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்ப அரசுக்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்ற விவகாரத்தைக் கையிலெடுத்த நீதிபதிகள், ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி, விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் இந்த ஆள்மாறாட்டம் நடந்திருக்காது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக்.16) அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆள்மாறாட்ட விவகாரத்தில் இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 19 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 19 பேரின் கைரேகைப் பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் கேட்டிருப்பதாகவும், அவை வந்தவுடன் அவர்களின் கைரேகை சரிபார்க்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகைப் பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டு, 4,250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மற்ற மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதால் வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், ஆள்மாறாட்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பினர். எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.