

மதுரை
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவை ஆதரிப்பார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது தொடர்பாக "உளறலுக்கு என்னிடம் பதில் இல்லை" என பதிலடி கொடுத்திருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன் மதுரையில் இன்று (அக்.16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது, ராஜீவ் படுகொலையில் சீமானின் சர்ச்சைக் கருத்து, இடைத்தேர்தல் என பல்வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அவற்றிற்கு வரிசையாகப் பதிலளித்த டிடிவி தினகரன், "யார், யாரோ வேடிக்கையாகப் பேசுவதை, உளறுவதை என்னிடம் கேள்வியாகக் கேட்டு எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. சசிகலா தற்போது சிறையில் இருக்கிறார். அதனால், சிறையில் இருப்பவர் பேச முடியாதே என்று வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறார்கள்" என்றார்.
முன்னதாக நேற்று (அக்.15) நாங்குநேரியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னரும் அதிமுகவையே ஆதரிப்பார். வீட்டில் இருந்தாலும் இருப்பாரே தவிர மற்ற எந்தக் கட்சியையும் அவர் ஆதரிக்கமாட்டார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள்" என்றார்.
சீமான் கருத்தை திரும்பப் பெற வேண்டும்..
சீமான் சர்ச்சைப் பேச்சு பற்றி, "எப்போதுமே மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துக்களை பேசி வருகிறார். இந்தியாவின் பிரதமராக இருந்தவரின் படுகொலையைப் பற்றி இப்படிப் பேசுவது சரியல்ல. இப்படிப் பேசி தேவையில்லாத பிரச்சினையை கிளப்ப வேண்டிய அவசியமும் இல்லை. சீமான், அவருடை சர்ச்சைப் பேச்சை திரும்பப் பெறுவதே அவருக்கு நல்லது" எனக் கூறினார்.
ஒரே சின்னம் பெற்று போட்டியிடுவோம்..
தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தையும் விளக்கினார். "எங்கள் கட்சிக்கென்று தனி சின்னத்தை பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிடுவோம். எங்கள் கட்சிக்கு சின்னம் பெறுவதற்கான விசாரணை நாளை(அக்.17) டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. பல சின்னங்களில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே ஒரே சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம்" எனத் தெரிவித்தார்.