Published : 16 Oct 2019 11:44 AM
Last Updated : 16 Oct 2019 11:44 AM

பெற்ற தாயை வீதியில் விட்ட கொடூரம்: கோவில்பட்டி பத்திரிகையாளர்கள் உதவியால் மூதாட்டி மீட்பு; துரிதமாக நடவடிக்கை எடுத்த கோட்டாட்சியருக்குக் குவியும் பாராட்டு

கோவில்பட்டியில் பெற்ற மகனே தாயை வீதியில் விட்ட நிலையில் ஆதரவற்ற அந்த மூதாட்டிக்கு பத்திரிகையாளர்கள் உதவி செய்த சம்பவம் நடந்துள்ளது.

கோவில்பட்டி, பங்களா தெரு 4-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் (75). இவர் தனது மகன் சீனியுடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக நோய் வாய்ப்பட்ட சண்முகத்தாயை, அவரது மகன் வீட்டுக்கு வெளியே விட்டுள்ளார்.

கடந்த 4 நாட்களாக இரவு, பகலாக மழையில் நனைந்தபடியும் உயிருக்குப் போராடியபடியும் சண்முகத்தாய் இருந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கோவில்பட்டி பத்தரிகையாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள், உடனடியாக கோட்டாட்சியர் ஜே.விஜயாவைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினர். அவரது நடவடிக்கையின் பேரில் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் வருவாய்த் துறையினர் வந்தனர்.

அவர்கள் விசாரணை நடத்தியதில், அந்த மூதாட்டி 2 நாட்கள் உணவருந்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, மூதாட்டி சண்முகத்தாயை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயா மற்றும் வருவாய்த் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று மூதாட்டியைப் பார்வையிட்டு, அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அந்த மூதாட்டியை பாண்டவர்மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூதாட்டியை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்த கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

எஸ்.கோமதிவிநாயகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x