

அ. அருள்தாசன்
திருநெல்வேலி
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தலைவர்கள் பிரச்சாரத்தை களைகட்ட வைக்கும் வகையில் பல்வேறு கலைக்குழுக்களின் கலைவிருந்து அரங்கேறி வருகிறது. இதற்காக கேரளத்திலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கலைஞர்கள் இத்தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த ஒருவாரமாக முகாமிட்டுள்ளனர்.
இத் தொகுதியில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அதிமுக வேட்பாளர் வி.நாராயணனை ஆதரித்து தமிழக முதல்வர் கே.பழனிசாமி 2 நாட்களாக இத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
2-ம் கட்டமாக வரும் 18-ம் தேதி வருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார களத்தில் இருக்கிறார். தொகுதி முழுக்க தமிழக அமைச்சர்கள் வலம்வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 2-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்துள்ளனர்.
அதிமுக தரப்பில் தங்கள் தலைவர்களின் பிரச்சாரத்தை களைகட்ட வைக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடு களை அந்தந்த பகுதிக்கு பொறுப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைச்சர் களும், முக்கிய நிர்வாகிகளும் கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை, திரைப்பட இசைக்கச்சேரி, எம்.ஜி.ஆர். வேடமிட்ட கலைஞர்களின் நடனம் என, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும், இசைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்காக, நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், மாறுவேடமிடும் கலைஞர்கள், உதவியாளர்கள் என்று நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இத் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். அமைச்சர்கள் பலரும் தங்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து கலைக்குழுக்களை அழைத்துவந்துள்ளனர். இதுதவிர, செண்டை மேளம், முத்துக்குடைகளுடன் பவனி, கதகளி, தெய்யம் நடனம் என்று கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
திமுக, காங்கிரஸ் சார்பில் பிரச்சார பகுதிகளில் தாரை தப்பட்டை, செண்டை மேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நடனம், இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் பலரும், இத் தொகுதியிலேயே கடந்த ஒருவாரமாக முகாமிட்டு, கட்சிகளின் அழைப்பின்பேரில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி தருகிறார்கள்.