

கோவை
கோவை மாநகரின் வர்த்தக பகுதிகளில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் திருடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், மாநகரில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் சாலை, ராஜவீதி, பெரிய கடை வீதி, நூறடி சாலை உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள் எடுக்கவும், பொருட்கள் வாங்கவும் மக்கள் குவிகின்றனர்.
குறிப்பாக, வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் இரண்டு மடங்காக உள்ளது.இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம், பொருட்களை மர்மநபர்கள் திருடுவதை தடுக்கவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் வர்த்தகப் பகுதிகளில் மாநகர காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் கூறும்போது,‘‘ மாநகரின் பல்வேறு இடங்களில், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. வர்த்தகப் பகுதிகளுக்கு செல்லும் போது தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக் குரிய நபர்கள் தென்பட்டால் காவல்துறை யினரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் தெரிவித்து, நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’’ என்றார்.
மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும்போது,‘‘ கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் குற்றப்பிரிவு காவல்துறை யினர் சாதாரண உடைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு, வழிப்பறி, ஜேப்படி, பேக் திருட்டு, கவனத்தை திசை திருப்பி நூதன திருட்டு போன்றவற்றில் ஈடுபடு பவர்களை தொடர்ந்து கண்டறிந்து, கைது செய்கின்றனர். பழைய குற்ற வாளிகளின் தற்போதைய நிலை குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
முக்கிய இடங்களில் வாட்ச் டவர்கள் (கண்காணிப்பு மேடை) அமைக்கப்பட்டு, காவலர்கள் அதில் நின்று கண்காணித்து வருகின்றனர். தவிர, ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களிடம் பொருட்களை பாதுகாப்பாக வைக்குமாறு எச்சரிக்கப் படுகிறது. சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து மெகா திரை மூலம் காவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.