

பல்லாவரம்
விவசாயத்தைக் காப்பாற்ற மாண வர்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 88-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘அப்துல் கலாம் கனவுகளை நிறைவேற்றுவதில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் மாணவ - மாணவிகளிடையே அவர் கலந் துரையாடினார். இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், பாட லாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:
முதல்முறை கலாமை விமானத் தில் சந்தித்தபோது அவர் என் அருகே வந்து அமர்ந்து, ‘இந்தி யாவைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க’ என்று கேட்டார். ஓர் இந்தியன் இந்தியாவைப் பற்றி எப்படி நினைக்கிறார் என்பதுதான், அந்தக் கேள்வியின் நோக்கம். யார் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பகுத்தறிவு மூலம் ஆய்வு செய்யுங்கள். ஒற்றை கல்வி முறை, ஒற்றை கலாச்சாரமாக இல்லாமல், பன் முகத்தன்மையோடு கற்க வேண்டும்,
மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை. எத்தனை நாள் மாணவர்களாக இருப்பிருப்பீர்கள். மாற்றத்தை நிகழ்த்த அரசியலுக்கு மாணவர்கள் தேவை, நீங்கள் வரவேண்டும் என நான் வர வேற்கிறேன்; முதல் ஆளாக உங் களை அரசியலுக்கு அழைக் கிறேன்.
முதல்வரான உடன் முதல் கையெழுத்து என்பது குறுகிய கால விஷயம். நான் நீண்ட கால தீர்வு சொல்கிறேன்; அதுதான் நேர்மை. நான் நேர்மையாக இருப் பேன். யார் வந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். விவசாயம் சரியில்லை என்று சொல்லாமல், இளைஞர்கள் களத்துக்கு வந்து, முறையான பயிற்சி பெற்று விவ சாயத்தை காக்க முன் வரவேண் டும். விவசாயத்துக்கு ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களை தேர்ந் தெடுத்து முறையாக படித்து விவசாயம் செய்ய வாருங்கள்.
இவ்வாறு கமல் கூறினார்.
‘‘அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும் என கூறுகிறீர்கள். ஆனால் அரசியல் அசுத்தமாக உள்ளதே’’ என ஒரு மாணவர் கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘‘ஸ்வட்ச் பாரத் என்று சொல்லும்போது குப்பை யும் சாக்கடையும் உள்ள இடத் துக்குதானே பிரதமர் அழைக்கிறார். குப்பையும் சாக்கடையும் இருக் கும் இடத்தில்தான் சுத்தம் செய்ய முடியும். அதுபோலத்தான் அரசிய லும். குப்பையும் சாக்கடையுமாக இருக்கும் அரசியலில் வந்து சுத்தம் செய்யுங்கள்’’ என கூறினார்.