

ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ,சீமானையும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோட்சே காந்தியை சுட்டதை சரி என்கிறார்கள். “நாங்கத்தாண்டா ராஜிவ் காந்தியை கொன்றோம், சரிதாண்டா, போடா. ஒரு காலம் வரும் வரலாறு திருப்பி எழுதப்படும். என் இனத்தை இந்திய ராணுவம் அமைதிப்படை என்கிற அநியாயப்படையை அனுப்பி என் இன மக்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்கிற வரலாறு எழுதப்படும்” என்று பேசியிருந்தார்.
இந்தப்பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். தான் பேசியதில் பின் வாங்கப்போவதில்லை என்று சீமான் பேட்டி கொடுத்தார். விக்கிரவாண்டி போலீஸார் பிரிவு 153 மற்றும் 504-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் சார்பில் டிஜிபி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் சார்பில் சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளதாவது. “ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ புலன் விசாரணை நடத்தியது. ஏராளமானோர் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு, பலர் தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தச்சூழ்நிலையில் சீமான் கடந்த 11-ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கூட்டத்தில் பேசும்போது பகிரங்கமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்று புதைத்தோம் என பெருமையுடன் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியிலும் அதை உறுதிப்படுத்தி தனது பேச்சிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலையை நாங்கள் தான் செய்தோம் என்று சீமான் பகிரங்கமாக தெரிவித்திருக்கும் நிலையில் சீமான் மீது 302 பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” இவ்வாறு காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.