Published : 15 Oct 2019 05:35 PM
Last Updated : 15 Oct 2019 05:35 PM

அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் கல்வி மாவட்டத்தில் 3875 மரக்கன்றுகள் நடும் விழா: 433 பள்ளிகளைச் சேர்ந்த 3875 ஆசிரியர்கள் பங்கேற்பு

மதுரை

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (அக்.15) மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 433 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 3875 ஆசிரியர்களால் 3875 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் பசுமை நண்பர்கள் குழு சார்பில் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 4 கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்றவாறு 12,872 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவெடுக்கப்பட்டன.

அதில், முதல் கட்டமாக மேலூர் கல்வி மாவட்டத்தில் 433 பள்ளிகளில் பணியாற்றும் 3875 ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்று யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட கல்வி அலுவலர் அ.மீனாவதி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எச்.பங்கஜம் முன்னிலை வகித்தார்.

இதில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அங்குள்ள 48 ஆசிரியர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.

இவ்விழாவில், பசுமை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பொன்.குமார், சூரிய பிரகாஷ், தாமஸ், யோகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x