

நெல்லை
சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் அவரை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து முதல்வரும் துணை முதல்வரும்தான் முடிவு செய்வார்கள். ஆனால், அவர் அதிமுகவை தவிர்த்துவிட்டு வேறு எந்த கட்சியிலும் இணையமாட்டார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து முதல்வர், துணை முதல்வரின் முடிவு செய்வார்கள். அவர் முதலில் வெளியே வரட்டும். அவர் சிறையிலிருந்து அவர் விரைவில் வெளியே வரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்றோரின் எண்ணம். அவர் திமுகவால் பழிவாங்கப்பட்டிருக்கிறார். 'அம்மா, சின்னம்மா' மீது திமுகதான் பொய்வழக்கு போட்டார்கள். என்னதான் அவர்கள் வழக்கு போட்டாலும். இருவரும் தெய்வத்தின் முன்னால் நிரபராதிகள்.
சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் வீட்டில் இருந்தாலும் இருப்பாரே தவிர வேறுகட்சிக்கு போகமாட்டார். இதுதான் என் மனசாட்சியின் கூற்று.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தொடர்பாக, "ராஜீவ்காந்தி கொலை தமிழகத்தில் நடந்திருக்கக் கூடாது. ஏன் ராஜீவ்காந்தி கொலையே நடந்திருக்கக் கூடாது. அவர் தமிழகத்தின் மீதும் தமிழ் மக்களின் மீதும் பற்று கொண்டவர். அவர் இந்திராகாந்தியின் செல்லப் பிள்ளை. அப்படி ஒருவரை கொலை செய்ததை நியாயப்படுத்திப் பேசுவது மடத்தனம். இது தமிழுக்கும், தமிழருக்கும் சீமான் செய்யும் இழுக்கு. இத்தகைய செயலை தமிழகத்தில் கட்சி நடத்துபவர்கள் யாரும் செய்யமாட்டார்கள். மானமுள்ள எந்த ஒரு மறத்தமிழனும் இதை செய்யமாட்டார்" என்றார்.