

திருப்பூர்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் அதிமுகவினர் பலர் புகார் அளித்தனர்.
முன்னாள் அதிமுக கவுன்சிலர் ரவி, அதிமுக அம்மா பேரவைச் செயலாளர் பி.வி.எஸ். கந்தவேல், அதிமுக 42-வது வட்டச் செயலாளர் அ.விவேகானந்தன், வார்டு அமைப்புச் செயலாளர் கிருஷ்ணகுமார், ரஞ்சித் ரத்தினம் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் பொ.சுப்பிரமணியன் என அதிமுகவைச் சேர்ந்த 6 பேர், திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் நேற்று (அக்.14) எம்.எஸ்.எம். ஆனந்தன் மீது புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"பொதுப்பணித்துறை, மாநகராட்சி வாகன ஓட்டுநர், அரசுப் பேருந்து ஓட்டுநர், பள்ளி ஆய்வகத்தில் பணி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இளநிலை உதவியாளர் என பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2015-ம் ஆண்டு முன் பணமாக ஒவ்வொருவரிடமும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பணம் பெற்றார். எங்களிடம் மொத்தமாக 23 லட்சத்து 50,000 ரூபாய் பெற்றார். மேலும் வேலை வாங்கிக் கொடுத்த பிறகு, எஞ்சிய தொகையைச் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதனை நம்பி நாங்கள் முன்பணமாக ஆளுக்கொரு தொகையாக ரூ.1 லட்சம் தொடங்கி இரண்டரை லட்சம் வரை பணம் கொடுத்தோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உறுதியாக வேலை வாங்கித் தருவதாக எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்தார். ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதம் ஆன பிறகும் வேலை வாங்கித் தரவில்லை. எங்களது பணத்தைக் கேட்டபோதும், அதற்கும் உரிய பதில் இல்லை.
எங்களை ஏமாற்றிய எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் அவரது உதவியாளர் ராஜேஷ்கண்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் இதுதொடர்பாக தனித்தனியாக மனுவை ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். மனுவைப் பெற்ற ஆட்சியர், மாநகர போலீஸார் மூலம் புகார் மனுவைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
புகார் அளித்த அதிமுகவினர்
இது தொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறுகையில், "பொய்யான புகார் அளித்துள்ளனர். என் மீதான காழ்ப்புணர்ச்சியில் இதனைச் செய்துள்ளனர். அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. யாரோ தூண்டிவிட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. மேற்கண்ட 6 பேர் மீது மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் விரைவில் புகார் அளிப்பேன்" என்றார்.
இதனிடையே அதிமுக அளித்த புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாவட்ட காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளார்.