Published : 15 Oct 2019 04:41 PM
Last Updated : 15 Oct 2019 04:41 PM

சமையல் கேஸ் சிலிண்டர்கள் டெலிவரிக்கு கூடுதல் டிப்ஸ் கேட்கும் ஊழியர்கள்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- உயர் நீதிமன்றம் கேள்வி 

சென்னை

கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அவரது மனுவில், “வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை விநியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நபர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர்.

நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் சிலிண்டர் நிறுவனங்களுக்குப் புகார்கள் தெரிவித்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிலிண்டர்கள் டெலிவரிக்காக கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் இன்று வந்தது. அப்போது நீதிபதிகள் ''கூடுதல் பணம் வசூலிப்பது பற்றி 2124 புகார்கள் உள்ளன. அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர்.

எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் ஏன் அதை இணையதளத்தில் வெளியிடவில்லை என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது.

சிலிண்டர்களை டெலிவரி செய்ய கூடுதலாக டிப்ஸ் என்கிற பெயரில் பணம் கேட்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வருகிற 1-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x