Published : 15 Oct 2019 04:06 PM
Last Updated : 15 Oct 2019 04:06 PM

‘பிகில்’ படத்துக்கு எதிரான உதவி இயக்குநர் வழக்கு: ஆவணங்களைத் தாக்கல் செய்ய அட்லீ தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள வழக்கில் அட்லீ தரப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில், பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பிகில்’, ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பு மற்றும் மிகுந்த பொருட்செலவுக்கு இடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையைத் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்ததாகவும் உதவி இயக்குநர் கே.பி.செல்வா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், அட்லீ இயக்கும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடைய கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே கதை திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ளமுடியும் என கூறி தன்னுடை புகாரை நிராகரித்ததால், 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்குத் தடை கோரியிருந்தார்.

இயக்குநர் அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராகச் சேர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த விவகாரம் காப்புரிமை தொடர்பாக இருப்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதால், உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக கே.பி.செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக உதவி இயக்குநர் ஏ.பி.செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதே நேரத்தில், தங்கள் தரப்பை கலந்து ஆலோசிக்காமல் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்ககூடாதென தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று உதவி இயக்குநர் செல்வா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கே.பி.செல்வா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் வழக்கு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஏஜிஎஸ் நிறுவனம் அவகாசம் கேட்டதால், அட்லீ மற்றும் உதவி இயக்குநர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x