Published : 15 Oct 2019 04:04 PM
Last Updated : 15 Oct 2019 04:04 PM

புதுச்சேரியில் பரவும் காய்ச்சல்: கடந்த 15 நாட்களில் 98 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களில் மட்டும் காய்ச்சல் பாதிப்பு என 671 பேர் வந்துள்ளனர். அதில் 98 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவக் கண்காணிப்பாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இச்சூழலில் கடந்த மாதத்திலிருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் பல மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக பலரும் சிகிச்சை பெறுவதும் அதிகரித்துள்ளது. காய்ச்சல் தொடர்பான மருந்துகளை பலரும் அதிக அளவில் வாங்கிச் செல்வதாகவும் மருந்தகங்களில் தெரிவிக்கின்றனர். மாலை நேரங்களில் பல மருந்தகங்களில் மக்கள் அதிக அளவில் சிகிச்சைக்காக காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதுதொடர்பாக அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் வாசுதேவனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களில் மட்டும் காய்ச்சல் பாதிப்பு என 671 பேர் வந்துள்ளனர். அதில் 98 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. இன்று மட்டும் அரசு மருத்துவமனையில் 10 பேர் வரை டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று தெரிவித்தார்.

குப்பை, தேங்கும் தண்ணீர், கொசு

கொசு, குப்பை அகற்றுவதில் உள்ள தாமதம் உள்ளிட்டவையும் காய்ச்சலுக்கு முக்கியக் காரணமாகும். பல காலி மனைகளில் தண்ணீர் தேங்கியும் உரிய நடவடிக்கையை நகராட்சிகள் எடுக்காததையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"நகரில் குப்பைத் தொட்டிகள் உள்ளன. குப்பை வரி வாங்குகின்றனர். குப்பை அகற்றாவிட்டால் யாரிடம் புகார் தருவது என்ற அலுவலர் எண்ணை நகராட்சி ஆணையர்கள் இதுவரை எழுதவில்லை" என்று மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x