Published : 15 Oct 2019 03:58 PM
Last Updated : 15 Oct 2019 03:58 PM

அரிசி போடாத 19 மாதங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கவில்லை? - புதுச்சேரி அரசுக்கு அதிமுக கேள்வி

புதுச்சேரி

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநருக்கு கோப்பினை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என்று முதல்வருக்கு அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து இன்று (அக்.15) ரெயின்போ நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திரும்பத் திரும்ப முதல்வர் நாராயணசாமி இலவச அரிசி திட்டத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொடுத்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்றமே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் எனத் தீர்ப்பு வழங்கிய நிலையில், இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநருக்கு கோப்பினை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

அதுவும் மக்களுக்காக அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் மக்களுக்கு இலவச அரிசியை ஏன் வழங்கவில்லை?

அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி இலவச அரிசி போட நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற வேண்டிய அரசு ஏன் திரும்பத் திரும்ப துணைநிலை ஆளுநரிடம் இலவச அரிசி சம்பந்தமான கோப்பை அனுப்ப வேண்டும்? இது அரசின் திட்டமிட்ட சதிச்செயல் ஆகும்.

அரிசிக்குப் பதில் பணம் போட்டு வருகிறோம் எனக் கூறும் முதல்வர் அரிசி போடாத 19 மாதங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கவில்லை? ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12 ஆயிரம் அளவில் ஏமாற்றிவிட்டு எப்படி இந்த அரசால் அரிசிக்குப் பதில் பணம் போடுகின்றோம் என்று கூற முடிகிறது".

இவ்வாறு அன்பழகன் கேள்வி எழுப்பினார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x