Published : 15 Oct 2019 03:20 PM
Last Updated : 15 Oct 2019 03:20 PM

ராஜீவ் காந்தி மரணம் குறித்த சீமானின் சர்ச்சைப் பேச்சு : மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்

சென்னை

ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து விழுப்புரம் ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அக்.13-ம் தேதி சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசும்போது, "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.

இந்தப் பேச்சு பலத்த சர்ச்சையை எழுப்பியது. ராஜீவ் காந்தி மரணத்தின் கொடூரத்தை யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதுபற்றி சீமான் நியாயப்படுத்தியும், தாங்கள்தான் கொன்று புதைத்தோம் எனும் ரீதியில் பேசியதை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டித்தது. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கண்டித்தன.

காங்கிரஸ் கட்சி சார்பில் சீமானை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என டிஜிபி மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சீமான் பேச்சு குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:

“வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் மூலம் 1.87 கோடி வாக்காளர்கள் திருத்தம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 86 சதவீதம் வாக்காளர்கள் சரிபார்த்துள்ளனர். குறைந்தபட்சமாக சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களில் 8 சதவீதம் வாக்காளர்கள் சரிபார்த்துள்ளனர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் இதுவரை மொத்தம் 91.42 லட்சம் மதிப்பிலான பணம், நகை, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.48.12 லட்சம் ரொக்கப் பணமும், ரூ.25 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான 22,847 லிட்டர் மதுபானமும், ரூ.13.85 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சீமான் பேச்சு குறித்து ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி முழு விசாரணை அறிக்கையை விழுப்புரம் ஆட்சியர் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது”.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அறிக்கையைப் பொறுத்தே தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்லும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x