Last Updated : 15 Oct, 2019 03:03 PM

 

Published : 15 Oct 2019 03:03 PM
Last Updated : 15 Oct 2019 03:03 PM

கீழடியின் காலத்தை நிர்ணயம் செய்தது எப்படி?- உயர் நீதிமன்ற நீதிபதியிடம் விவரித்த தொல்லியல் அலுவலர்

மதுரை

கீழடியின் காலத்தை நிர்ணயம் செய்தது எப்படி? என்பது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனிடம் தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி விளக்கினார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நிறைவடைந்துள்ளது. இதற்காக தோண்டப்பட்ட குழிகளையும், இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களையும் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் நேற்று (திங்கள்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்கள் குறித்து தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி விளக்கினார்.

அப்போது அவர் நீதிபதியிடம் கூறியதாவது:

5-ம் கட்ட அகழ்வாயில் சுடு மண் பானை ஓடுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் முக்கியமான கருப்பு மற்றும் சிவப்பு வண்ணத்திலான (பிளாக் அன்ட் ரெட்) பானைகள் ஓடுகள். இந்த பானை ஓடுகளை வைத்தே கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவுக்கு வரப்பட்டது.

இந்த வகையிலான பானைகள் உலோக காலத்தை சேர்ந்தது. கீழடியில் வாழ்ந்தவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பானைகளை தயாரித்துள்ளனர். 1010 டிகிரிக்கு மேல் சூடுபடுத்தி இந்த பானைகளை தயாரித்துள்ளனர்.

இங்கு தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன. இது இந்தியாவிலேயே பழமையான எழுத்து வடிவம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களில் மிக முக்கியமானது வெள்ளை, ஆரஞ்ச் நிறத்திலான முத்திரை பதித்த விலைமதிக்க முடியாத ஸ்டோன் (பீட்ஸ்) கண்டுபிடிக்கப்பட்டது தான்.

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கற்களை செல்வந்தர்கள் முத்திரை மோதிரம் போல் பயன்படுத்திருக்கலாம். இது செமி பிரீசியஸ் ஸ்டான் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழாய்வில் இதுபோன் கற்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுக்கு முன்பு குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் வணிக தொடர்பு இருந்திருப்பதற்கான அடையாளமாக இதனை கருதலாம்.

கருப்பு, சிகப்பு நிற பானைகளில் பல்வேறு அடையாளக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. பானைகளை சுடுவதற்கு முன்பும், சுட்ட பிறகும் பல்வேறு அடையாளங்களை பொறித்துள்ளனர்.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட் பழங்கால பொருட்கள் விரைவில் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். கீழடிக்கு இதுவரை 4 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

இவ்வாறு ஆசைதம்பி தெரிவித்தார்.

கீழடியில் 2600 ஆண்டுக்கு முன்பே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்த்தியாக பானைகள் மற்றும் அணிகலன்கள் தயாரிக்கப்பட்ட செய்தியை கேட்டு நீதிபதி வைத்தியநாதன் வியந்தார்.

கீழடியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற போது நேரில் வந்து பார்வையிட்டதை நினைவு கூர்ந்த நீதிபதி, அகழாய்வுக்கு நிலம் வழங்கியவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x