Published : 15 Oct 2019 02:15 PM
Last Updated : 15 Oct 2019 02:15 PM

ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றியவர்: அபிஜித் பானர்ஜிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியான அபிஜித் பானர்ஜிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று (அக்.14) அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார அறிஞரான அபிஜித் பானர்ஜி, அமெரிக்காவில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரும் அபிஜித் பானர்ஜியின் மனைவியுமான எஸ்தர் டூப்ளோ, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டுக்கான பொருளாதாரப் பிரிவுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்கள் மூன்று பேருமே தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

அபிஜித் பானர்ஜிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்

"வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதாரத் திட்டங்களை வகுத்தமைக்காக அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவி எஸ்தருக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்ததற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இந்தியாவில் பிறந்த சர்வதேசப் பொருளாதார மேதையான அபிஜித் பானர்ஜி பொருளாதார ஆராய்ச்சியாளராகவும் பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர். அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள ஜே-பிஏஎல் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது எஸ்தர் உட்பட உலகப் புகழ்பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது.

வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

அபிஜித் பானர்ஜியின் பொருளாதார ஆய்வுகள், வறுமை ஒழிப்பில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வி பெற்றுள்ளனர். தவிர, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளனர். குறிப்பாக, நோய்த் தடுப்புத் திட்டங்கள் குறித்த இவர்களது ஆய்வுகள், பல நாடுகளில் சிறந்த பலனைத் தந்துள்ளது.

ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக அருந்தொண்டு ஆற்றி வருகின்ற கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து இவ்விருதை வென்று இருப்பது அரிய நிகழ்வு. இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருக்கிற இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவி எஸ்தருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்த அபிஜித், உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களைத் தீட்டியதற்காக நோபல் பரிசு வாங்கியிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x