

விழுப்புரம்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, விழுப்புரம் அருகேயுள்ள காணையில் நேற்று மாலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியது:
அதிமுகவில் எந்த ஒரு தொண்டனும் முதல்வ ராகவும், கழகத்தின் ஒருங்கிணைப் பாளராகவும், இணை ஒருங் கிணைப்பாளாரகவும் வரலாம். ஆனால், திமுகவில் அப்படி வர முடியாது. ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் மட்டுமே அத்தனையும் அனுபவிக்க வேண்டும் என்று இருப்பவர்கள்.
'கடந்த 8 ஆண்டுகளாக, அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்?' என்று ஸ்டாலின் கேட்கிறார்.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையில் திமுக ஆட்சியில் கடும் மின்வெட்டு இருந்தது. அதனை தீர்க்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டுக்குள் மின் பற்றாக்குறையைப் போக்கி, மின் உற்பத்தியில் உபரி மாநிமாக தமிழகத்தை மாற்றியுள்ளோம்.
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்புகள் நடத்தன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த நிலங்களை மீண்டும் உரியவர்களிடமே வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சியில் ரூ.24 ஆயிரம் கோடியில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் ரூ.1,47,000 கோடி முதலீடுகள் கொண்டு வரப்பட்டு தொழில்கள் தொடங்கப்பட்டு, 27 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
ஜெயலலிதா தொடங்கிய திட்டங்கள் அனைத்தையும் தற்போது முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. எதையும் நிறுத்தவில்லை. கூடுதலாகதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பல பொய்களைக் கூறி வெற்றி பெற்று விட்டார்கள். இப்போது அதே பொய்களைப் பேசி வெற்றி பெற முடியாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழப்பது உறுதி.
தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ், விக்கிரவாண்டி பகுதியில் மட்டும் 72 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங் கும் காவிரியில், மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட அனுமதிப்போம் என்றும், காவிரி முறைப்படுத்துக் குழுவை கலைப்போம் என்றும் கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி சொல்கிறார். அதன்பிறகு, தமிழகத்திற்கு வந்த ராகுல்காந் தியின் கையைப் பிடித்து, 'அவர்தான் பிரதமர் வேட்பாளர்' என்று திமுக தலைவர் கூறுகிறார். இந்த முறை திமுகவுக்கு வாக்களிப்பதில்லை என்று விக்கிரவாண்டி மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் சி.வி.சண்முகம், அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.