Published : 15 Oct 2019 10:34 AM
Last Updated : 15 Oct 2019 10:34 AM

இன்று தேசிய காளான் தினம்: உணவு காளான்கள் தேவை இரு மடங்காக அதிகரிப்பு- உற்பத்தியை பெருக்க வேளாண்துறை ஊக்கம் அளிக்குமா?

எல்.மோகன்

நாகர்கோவில்

இந்தியாவில் கடந்த 15 ஆண்டு களில் உணவு காளான்களின் தேவை இரு மடங்காக அதிகரித் துள்ள நிலையில், தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படாததால் தட்டுப் பாடு நிலவுகிறது. காளான் உற் பத்தியை பெருக்க வேளாண்மைத் துறை கூடுதலாக ஊக்கம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஊட்டச்சத்து மிக்க காளான் களை அன்றாட உணவுடன் சேர்த் துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, ஆண்டு தோறும் அக்டோபர் 15-ம் தேதி தேசிய காளான் தினம் கடைபிடிக்கப் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களால் அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வந்த காளான், தற்போது அதிகம் விரும்பப்படுகிறது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த காளான் ஆராய்ச்சியாளர் சாந்தி வசந்தமலர் கூறியதாவது:

பச்சையம் இல்லாத தாவரமான காளான்கள், மடிந்த தாவரங்களின் சத்துக்களை பெற்று வளர்கின்றன. தற் போது, 10-க்கும் மேற்பட்ட காளான் வகைகள் உணவுக்கு பயன்படுகின் றன. இந்தியாவில் பால் காளான், சிப்பி காளான், முட்டைக் காளான் ஆகியவை பயன்படுகின்றன.

சமீபத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் பழங்குடி மக்கள் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய ஆய்வில், அரிசி காளான், புற்றுக் காளான், வெள்ளைத்தாழன் காளான் உட்பட 8 விதமான உணவுக்கேற்ற காளான்கள், விஷத்தன்மை கொண்ட 7 வகைக் காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகுறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

சிறப்பு இயல்புகள்

காளானில் கால்சியம், புரதம், நார்ச்சத்துக்கள் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் மருந்துகள் தயார் செய்வதற்கும் காளான்கள் பயன்படுகின்றன.

உடலில் கொழுப்பை கரைப் பது, பக்கவாதம், இருதயம், புற்று நோய்களுக்கு நிவாரணம் போன் றவை காளானின் தனி சிறப்பு களாகும். கல்லீரல், கணையத் தையும் பாதுகாக்கின்றன. உடலில் இன்சுலினை அதிகம் சுரக்கச் செய்கின்றன.

சைவ, அசைவ உணவு பிரியர்களால் விரும்பி உண்ணப்படுவதால் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் காளான் களின் தேவை இரு மடங்காக அதி கரித்துள்ளது.

ஆனால், தேவைக் கேற்ற உற்பத்தி இல்லை. வேளாண் அறிவியல் மையம் மூலம், விதைகள் வழங்கி குடிசைத் தொழிலாக காளான் வளர்ப்பு நடைபெற்று வந்த போதும் தட்டுப்பாடாகவே உள்ளது. விவசாயி கள் மத்தியில் காளான் வளர்க்கும் ஆர்வத்தை வேளாண்துறை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x