

சென்னை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவதால், ஏடீஸ் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலின் தீவிரத்தால் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன.
டெங்குவை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப் படுத்துதல் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகா தாரத் துறை எடுத்து வருகிறது. ஆனாலும், டெங்கு வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மழை தொடங்கினால் பாதிப்பு
டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் என்பதால், ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:
டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங் குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வீடு களுக்குள் இந்த கொசுக்களின் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால், வெளிப்பகுதிகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொசுக் கள் உற்பத்தியை கட்டுப்படுத்த கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகக்கூடியவை. அத னால், திறந்தவெளியில் இருக்கும் சிமென்ட் தொட்டி, தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டு, கப், தேங்காய் மூடி, வாளி, டயர் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்குவை கட்டுப்படுத்த, அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடு, குடியிருப்பு வளாகம், பள்ளி, கடை, வணிக வளாகம், அரசு அலுவலகம், காவல் நிலையம், திருமண மண்டபம், திரையரங்கு உள்ளிட்ட அனைத்து இடங் களையும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அங்கு டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபரா தம் விதிக்கப்படும்.
எனவே, டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்கள் அகற்றப்படாமல் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆய்வின்போது அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.