

சென்னை
வாடகை தகராறு, வீட்டை காலி செய்தல் போன்ற பிரச்னைகளுக்கு வாடகை நீதிமன்றங்களை நாட பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் அவசியம் கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் நலனைக் காக்கும் வகையில் புதிய சட்டம் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி வீட்டு உரிமை யாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையே வீட்டு வாடகை தொடர்பான எழுத்துப்பூர்வமான ஒப்பந்த பத்திரம் இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட பதிவு அலுவல ரிடம் மூன்று மாத காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் ஒப்பந்தங்களுக்கு தனிப்பதிவு எண்கள் வழங்கப்பட்டு, அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டில் குடியிருக் கும் வாடகைதாரரோ அல்லது வீட்டின் உரிமையாளரோ இந்த ஒப்பந்தங்களை பதிவு செய்யலாம். ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாக உள்ள முடிவுக்கு வராத வாடகை ஒப்பந்தங்களும் இந்த புதிய சட்டத்தின் மூலமாக பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சட்டம் நகர்ப்புறங்களை சார்ந்த அனைவருக்கும் பொருந்தும் என பல்வேறு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்நிலையில் வீட்டு வாடகையை முறையாக செலுத் தாததால் தனது வீட்டைக் காலி செய்துதரக்கோரி வீட்டு உரிமை யாளர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சென்னை சிறுவழக்கு கள் நீதிமன்ற பதிவாளர், எழுத் துப்பூர்வமான பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து வீட்டு உரிமையாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ எழுத்துப்பூர்வமான அல்லது பதிவு செய்யப்படாத வாடகை ஒப்பந்தப்பத்திரங்கள் இல்லை என்றாலும் கூட வீட்டு உரிமையாளரோ அல்லது வாடகை தாரரோ வாடகை நீதிமன்றங்களை நாட முடியும். அதற்கு புதிதாக அமலுக்கு வந்துள்ள வாடகை சட்டத்தில் பிரிவு 21(2) பிரகாரம் வழிவகை உள்ளது.
எனவே எழுத்துப்பூர்வமான வாடகை ஒப்பந்தப் பத்திரம் இல்லை என்றும், அவை முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறி வாடகை- நீதிமன்றத்தை நாட முடியாது என இருதரப்புக்கும் சட்டப்படியாக உள்ள உரிமையை மறுக்க முடியாது.
எனவே வீட்டு உரிமையாளர் தொடர்ந்த வழக்கை சட்டத் துக்குட்பட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக சிறுவழக்குகள் நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் இந்த உத்தரவை அனைத்து வாடகை நீதிமன்றங்களுக்கும் பதிவுத்துறை அனுப்பி வைக்கவேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.