Published : 14 Oct 2019 07:25 PM
Last Updated : 14 Oct 2019 07:25 PM

ராஜீவைக் கொன்று புதைத்தோம் என்று பேசுவதா?- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான் மீது காங்கிரஸ் புகார்

சென்னை

ராஜீவைக் கொன்று புதைத்தது நாங்கள்தான் என பொதுவெளியில் பேசும் சீமானால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்பில் உள்ளனர். அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என காங்கிரஸ் சார்பில் டிஜிபி, தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி மரணத்தைப் பற்றியும், இந்திய அமைதிப்படை குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து காங்கிரஸார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சீமான் மீண்டும் தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். தன்னுடன் விவாதம் நடத்தத் தயாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சவால் விடுத்தார். இந்நிலையில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் சீமான் மீது டிஜிபி மற்றும் தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக ராஜீவ் மரணம் குறித்தும், இந்திய ராணுவம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார்.

சீமான் பகிரங்கமாக ராஜீவை நாங்கள்தான் (சீமான் உட்பட) கொன்று புதைத்தோம் என்று பேசியுள்ளார், வருங்காலத்தில் வரலாறு மாற்றி எழுதப்படும். அதில் தமிழர்கள் ராஜீவைக் கொன்றார்கள் என பதிவு செய்யப்படும் என பேசியுள்ளார். அதன் அடிப்படையில் இந்தப் புகாரை அளிக்கிறேன்.

அவர் பகிரங்கமாக இந்திய ராணுவம் குறித்து, பொதுவெளியில் விமர்சித்துள்ளார். தேசத்துக்காக தேசத்தைக் காக்க தியாகமும் ரத்தமும் சிந்திய ராணுவத்தை கடுமையாக விமர்சிதுள்ளார்.

ராஜீவ் மரணத்தைப் பற்றியும் பகிரங்கமாக நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று பேசியுள்ளார். இதன் அடிப்படையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் போர் தொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அதனடிப்படையில் ஐபிசி 121( இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கும் வகையில் பேசுவது, யாரையாவது தூண்டுவது). மற்றும் ராஜீவை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று பேசியதன் அடிப்படையில் 302 (கொலைக்குற்றம்) பிரிவின் கீழும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவர்களது கட்சி வேட்பாளர்களையும் தகுதியிழப்பு செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்’’.

இவ்வாறு புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், “தமிழகத்தில் இரண்டு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. எத்தகைய கோட்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு பொது அமைதிக்கு எதிராகப் பேசியுள்ளார்.

நாங்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்று புதைத்தோம் என்று பேசி இருக்கிறார். இதனைக் கேட்டு எங்கள் தொண்டர்கள் வெகுண்டுள்ளார்கள். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளேன். எனவே, தேர்தல் ஆணையம் இடைதேர்தல் நடக்கும் இரண்டு தொகுதியிலும் அந்தக் கட்சியின் வேட்பாளர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

சீமான் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்’’ என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x