Last Updated : 14 Oct, 2019 05:37 PM

 

Published : 14 Oct 2019 05:37 PM
Last Updated : 14 Oct 2019 05:37 PM

கீழடி 6-ம் கட்ட அகழாய்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்தால் நன்றாக இருக்கும்: தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி

திருப்புவனம்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்தால் நன்றாக இருக்கும் என மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல்துறை மேற்கொண்ட 5-ம் கட்ட அகழாய்வு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் இன்று (அக்.14) மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் கீழடி அகழாய்வை பார்வையிட்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக தொல்லியல் ஆணையர் கேட்டுகொண்டதால் கீழடி அகழாய்வை பார்வையிட வந்தேன். 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறை சிறப்பாக செய்துள்ளது. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அகழாய்வு செய்தது வரவேற்கத்தக்கது.

கீழடியில் பெரிய அளவில் நகர நாகரிம் இருந்துள்ளது. நாங்கள் ஆய்வு செய்தபோது கீழடி நகர நாகரீகம் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரியவந்தது. நான்காம் கட்ட அகழாய்வு மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

கீழடியில் பெரிய தொல்லியல் மேடு உள்ளது. மொத்தம் 110 ஏக்கர் அகழாய்வு மேற்கொள்ள கூடிய பகுதியாக உள்ளது. இதில் இதுவரை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து 6 ஏக்கரில் மட்டுமே அகழாய்வு செய்துள்ளன. ஐந்து கட்ட அகழாய்வு மூலம் 25 சதவீதம் வரை அகழாய்வு செய்திருக்க வேண்டும்.

நுணுக்கமாகவும், பொறுமையாகவும் செய்வதால் தாமதம் ஏற்படுகிறது. இந்த அகழாய்விலேயே பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இன்னும் விரிவாகவும், துல்லியமாகவும் ஆய்வு செய்தால் கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும்.

அகழாய்வுக்கு நிலங்களை கொடுத்தவர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பால் தான் தமிழர்களின் நகர நாகரிகம் வெளியே வந்தது. கீழடி குறித்த ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் பாடப்புத்தகங்களில் கீழடி அகழாய்வு குறித்த தகவல்களை வைக்க வேண்டும்.

6-ம் கட்ட அகழாய்வை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செய்தால் நன்றாக இருக்கும். ஆரம்பக்கட்டத்தில் கீழடி அகழாய்வு குறித்து வெளியே தெரியாமல் இருந்தது. தற்போது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் தமிழக தொல்லியல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x