

தேனி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சிக்கிய தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான். இவரும் இவரது தந்தை முகமது சமியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவர் இர்பானை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று (அக்.14) விசாரித்த் நீதிபதி பன்னீர்செல்வம், இன்றிலிருந்து நாளை மதியம் வரை ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக காவலில் எடுக்கப்பட்ட இர்பானிடம் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை அறிக்கை தாக்கல்:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள் படித்த மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கமிட்டியினரை தேனி சிபிசிஐடி போலீஸார் நேற்று முழுவதும் விசாரணை செய்தனர்.
நேற்றைய விசாரணையில் ஆஜரான சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக்கல்லூரிகளின் கமிட்டியிடம் பெறப்பட்ட தகவல்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வத்திடம் தேனி சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தாக்கல் செய்தார்.