Published : 14 Oct 2019 04:38 PM
Last Updated : 14 Oct 2019 04:38 PM

சிங்கள அரசை விட சக போராளிகளையும், மக்களையும் அதிகம் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள்: சீமானுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

சென்னை

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத பிரபாகரன், சிங்களப் படையுடன் கைகோத்து அமைதிப்படையைத் தாக்கினார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மேலும், விவாதத்துக்குத் தயார் என்று சீமானின் சவாலையும் அவர் ஏற்றுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்த சர்ச்சைப் பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை என்று தெரிவித்த சீமான், விவாதத்துக்கு கே.எஸ்.அழகிரி தயாரா? என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் தான் விவாதத்துக்குத் தயார் என கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு கே.எஸ்.அழகிரி இன்று அளித்த பேட்டி:

ராஜீவ் கொலை குறித்து தாம் பேசியதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று சீமான் சொல்கிறாரே?

சீமான் கூறுவது அவருடைய கருத்து. கருத்து கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அதேபோன்று எங்களுடைய கருத்தைச் சொல்வதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது. இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை சீரழிந்து போனதற்கு காரணம் விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரம்தான்.

தமிழர்கள் பிரச்சினையில் தங்களைத் தவிர யாரும் தலையிடக்கூடாது என்று விடுதலைப் புலிகள் நினைத்தனர். சகோதர யுத்தம் என்கிற பெயரில் சிங்கள அரசு அழித்ததை விட விடுதலைப் புலிகள் கொன்ற தமிழர்கள்தான் அதிகம். அதற்காக இவர்கள் கொன்ற தமிழர்கள், இயக்கங்கள் ஏராளம்.

அதற்கு இவர்கள் மற்றவர்களைத் துரோகிகள் என்று கூறினர். இவர்கள் மற்றவர்களைத் துரோகிகள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? அனைத்து சர்வாதிகார இயக்கங்களும் அப்படித்தான் சொல்லியிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி போன்றோர் தன்னைத் தவிர மற்றவர்களைத் துரோகிகள் என்றனர்.

இவ்வாறு பேசி சிங்கள அரசுக்கு எதிராகப் போராடிய அனைவரையும் அழித்துவிட்டு, கடைசியில் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் விடுதலைப் புலிகள் இலங்கை அரசால் அழிந்து போனார்கள்.

எந்தப் போராட்டமும் ஜனநாயக் வழியில்தான் நடக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் வென்றது மிகக்குறைவான அளவே. அதுவும் நீடித்ததில்லை. ரஷ்யாவில் கம்யூனிஸப் புரட்சிகூட 60 ஆண்டுகளுக்குப் பின் வீழ்ந்துபோனது.

இலங்கையில் தமிழர்களின் நியாயமான உரிமைகளை மீட்டுக்கொடுத்தவர் ராஜீவ் காந்தி மட்டுமே. வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் ஒன்றிணைய வேண்டும். அதிக அதிகாரம் கொண்ட தனி மாநிலமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் 30 ஆண்டுகாலமாகப் போராடிய தந்தை செல்வாவின் கனவாக இருந்தது.

அந்தக் கோரிக்கையை ராஜீவ் சிங்கள அரசை மிரட்டிப் பெற்றுக்கொடுத்தார். ஆனால் அது ஜனநாயகபூர்வமாக நடக்க வேண்டும். தேர்தல் மூலம் பிரபாகரன் முதல்வராக வரவேண்டும் என்றார். ஆனால் பிரபாகரனுக்குத் தேர்தல் மீது நம்பிக்கை இல்லை. தேர்தலில் அவர் நின்றால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதனால் அவர் தேர்தலைப் புறக்கணித்தார். அமைதி ஒப்பந்தத்தை புறக்கணித்தார்.

ஐபிகேஎப் அங்கு தமிழர்களை வேட்டையாடியது, கொன்று குவித்தது. இது குறித்து நீங்கள் வாதத்துக்குத் தயாரா என்று சீமான் கேட்கிறாரே?

தாராளமாக நான் விவாதத்துக்குத் தயார். ஐபிகேஎப் இலங்கைக்கு அனுப்பப்பட்டதன் நோக்கமே தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கவே. மற்ற போராளிக் குழுக்களை ஒன்றிணைத்து அங்கு தமிழர்களுக்கான உரிமையைப் பாதுகாக்கவே அனுப்பப்பட்டது. இந்திய அரசாங்கம் அனைத்து போராளிக் குழுக்களையும் ஒன்றாகப் பார்த்தது.

ஆனால், பிரபாகரன் தங்கள் குழு மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்றபோது பிரச்சினை வந்தது. இதைச் சரிசெய்ய இந்த அரசு முயன்றபோது பிரபாகரன் இதற்கு எதிராக நின்றார். அவர்கள் தந்திரமாக ஐபிகேஎப்-ஐத் தாக்க ஆரம்பித்தார்கள். சிங்களப் படையுடன் கைகோத்துக் கொண்டு ஐபிகேஎப் படைகளை பிரபாகரன் தாக்கினார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போன்று ஒன்றுசேர்ந்து தாக்கியபோது இந்திய அமைதிப்படைக்கு அது சிக்கலை ஏற்படுத்தியது.

யாருக்காகப் போனோமோ அவர்கள் சிங்கள ராணுவத்துடன் கைகோத்துத் தாக்கியபோது நமது ராணுவத்துக்கு சிக்கல் வந்தது. நீங்கள் வரலாற்றை சரியாகப் பார்க்க வேண்டும். இதுபோன்று எதிரிக்கு எதிரி நண்பர் என்கிற ரீதியில் செயல்பட்டு, தொடர்ச்சியாக தவறுகள் செய்து இறுதியில் விடுதலைப் புலிகளும் அழிந்தார்கள். தமிழ் இனம் அழியக் காரணமாக இருந்தார்கள். இவர்கள் ஆக்கபூர்வமாக எதையுமே செய்ததில்லை.

காந்தி கொல்லப்பட்டது குறித்து விமர்சனம் வந்தபோதெல்லாம் காங்கிரஸ் எதிர்த்து வலுவாகக் குரல் கொடுப்பதில்லை என்கிறாரே சீமான்?

இல்லை. அனைத்தையும் எதிர்த்துதான் குரல் கொடுக்கிறோம். காந்தியின் மரணம் குறித்து பாஜக செய்த விமர்சனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளேன். தமிழ் மொழி குறித்த பிரச்சினையில் காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளது. பாஜக ஒரே கட்சி, ஒரே கலாச்சாரம், ஒரே அரசியல் என்றபோது கடுமையாக எதிர்த்து வந்துள்ளேன். பொருளாதாரப் பிரச்சினையில் கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறோம். கடுமையாக பிரச்சாரம் செய்கிறோம். நேர்மையாக பிரச்சாரம் செய்கிறோம். வன்முறையைத் தூண்டவில்லை.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x