சீன அதிபரின் உருவத்தை தத்ரூபமாக பொறித்து உலக கவனத்தை ஈர்த்த சிறுமுகை சால்வை: மவுசு அதிகரிப்பால் நெசவாளர்கள் நெகிழ்ச்சி

சீன அதிபருக்கு அளிக்கப்பட்ட சால்வையை வடிவமைத்த வடிவமைப்பாளர் தர்மராஜ்
சீன அதிபருக்கு அளிக்கப்பட்ட சால்வையை வடிவமைத்த வடிவமைப்பாளர் தர்மராஜ்
Updated on
2 min read

மேட்டுப்பாளையம்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தமிழக வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால் மத்திய, மாநில அரசுகள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. அதில் ஒன்றாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட சால்வையும் அதிபருக்குப் பரிசளிக்கப்பட்டது. அதில், பட்டு நூல்களைப் பயன்படுத்தி சீன அதிபர் புன்சிரிப்புடன் இருப்பது தத்ரூபமாக நெய்யப்பட்டிருந்தது. அதிபரின் முகம், உருவத்தின் பின்புலம் மற்றும் பார்டருக்கு தங்க நிறத்திலான சரிகை பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த சால்வையைப் பிடித்தபடி சீன அதிபரும், பிரதமர் மோடியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு, உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெசவாளர் கிராமம்

மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுமுகை கிராமம். இங்கு சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் கைத்தறி தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு தயாராகும் மென்பட்டு சேலை ரகங்கள், தரம் மற்றும் வேலைப்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் வர்த்தகர்கள் மத்தியில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றவை. இங்கு தயாராகும் கைத்தறி மென்பட்டு, கோரா காட்டன் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. திருமண பட்டுப் புடவைகளில் மணமகன் மற்றும் மணமகளின் உருவங்களையும் இவர்கள் தத்ரூபமாக நெய்து தருகின்றனர்.

மணமகன் - மணமகளின் உருவங்கள் பொறித்த பட்டுப்புடவை

இரவு, பகலாக...

சீன அதிபரின் உருவத்தை வடிவமைத்த ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் வடிமைப்பாளர் தர்மராஜ் கூறும்போது, "கணக்குப்படி பார்த்தால் 10 முதல் 15 நாள் இல்லாமல் ஒரு சால்வையை நெய்ய முடியாது. குறைந்தபட்சம் 8 நாட்களாவது தேவை. உடனடியாக அளிக்க வேண்டி இருந்ததால் சண்முக சுந்தரம், மனோஜ்குமார் ஆகிய 2 நெசவாளர்கள் தொடர்ந்து 4 நாள் இடைவெளி இல்லாமல் இரவு, பகலாக வேலை பார்த்து சீன அதிபருக்கு அளிக்க வேண்டிய சால்வையை நெய்து முடித்தனர். இந்த உழைப்பின் பயனாக சிறுமுகையின் பெயர் உலகம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே சிறுமுகை பட்டுக்கு நல்ல பெயர் உள்ளது.

இந்நிலையில், சீன அதிபருக்கு பட்டு சால்வை வழங்கியதன் மூலம் கிடைத்த வரவேற்பு காரணமாக நடப்பாண்டு தீபாவளி விற்பனையும் கடந்த ஆண்டைவிட அதிகரிக்கும். அதற்கேற்றார்போல் ஆர்டர்களும் வருகின்றன. அதிபருக்கு அளிக்கப்பட்ட சால்வை ரூ.45,000 மதிப்புடையது," என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in