Published : 14 Oct 2019 03:21 PM
Last Updated : 14 Oct 2019 03:21 PM

காங்கிரஸுக்கு ரோஷம் வரட்டும் என்றுதான் நான் பேசுகிறேன்: ராஜீவ் கொலை சர்ச்சைப் பேச்சு பற்றி சீமான் பதில்

ராஜீவ் காந்தி கொலை குறித்துப் பேசியது சரிதான். காங்கிரஸாருக்கு ரோஷம் வரட்டும் என்பதற்காகத்தான் பேசுகிறேன். பேசிய வார்த்தைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (அக்.13) சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசும்போது, "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து இன்று விக்கிரவாண்டி போலீஸார் சீமான் மீது, வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது பேச்சு குறித்து சீமான் வாய் திறந்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சீமான் தெரிவித்ததாவது:

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் கொலை குறித்த கருத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே?

வழக்குப் பதிவில் என்ன இருக்கிறது என ஒன்றும் புரியவில்லை. இதுபோன்ற ஏராளமான வழக்குகள் என்மீது உள்ளன. அதையெல்லாம் எதிர்கொண்டுத்தான் வந்துள்ளோம்.

காங்கிரஸ்காரர்கள் கொந்தளிக்கிறார்கள், போராடுகிறார்கள் என்பதை எண்ணும்போது மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியே எடுக்கவும், வெளியே இருக்கும் என்னையும் உள்ளே தள்ளப் போராடுகிறார்கள். எந்த மக்கள் பிரச்சினைக்காக இவர்கள் போராடினார்கள்?

பரவாயில்லை இதற்காகவாவது போராடுகிறார்களே என்று திருப்தியடைய வேண்டியதுதான். தேசவிரோதமாகப் பேசுகிறேன் என்கிறார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு சலித்துப் போய்விட்டேன். என்ன கலவரம் வந்துவிட்டது?காங்கிரஸுக்குள்தான் கலவரம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் உங்கள் மீது புகார் அளித்துள்ளாரே?

பிரச்சாரத்தில் இப்படித்தான் பேசவேண்டும் என தேர்தல் ஆணையம் விதி எதுவும் வைத்துள்ளதா என்ன? இப்படித்தான் பேசவேண்டும், இதை இதை பேசக்கூடாது என்று உள்ளதா? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இடைத்தேர்தலில் கோடிக்கோடியாக கொட்டிக் கொடுக்கிறார்கள்.

அதையெல்லாம் தடுப்போம் என்று விளம்பரம் செய்கிறார்கள். அப்படி எதுவும் நடப்பதே இல்லை. ஒரு நடவடிக்கையும் இல்லையே. தேர்தல் எங்கே நடக்கிறது? விலை வைத்து வெற்றி பெறப்படுகிறது. முதலில் அதைத் தடுக்கட்டும். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்று பிறகு பார்ப்போம் .

பிரபாகரனை வைத்து நீங்கள் அரசியல் செய்வதாக கே.எஸ்.அழகிரி கூறுகிறாரே?

ஆமாம். அரசியல் செய்யத்தான் செய்வோம். எங்கள் இனத்தின் தலைவரை முன்னிறுத்தித்தான் பிரச்சாரம் செய்வோம். உங்கள் பார்வையில் பிரபாகரன் பயங்கரவாதி. காந்தியின் பார்வையில் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்றோர் தீவிரவாதிகள்தான். அப்படித்தான் அவர்கள் பார்த்தார்கள்.

எங்கள் இனத்தின் பெருமைமிகு அடையாளம் பிரபாகரன். அதை முன்னிறுத்தித்தான் அரசியல் செய்வோம். ஒரு இனம் தனக்கான தேசத்தைப் பெறுவதில் போராடுவதைவிட என்ன பெரிய அரசியல் இருக்கப்போகிறது?

முன்னாள் பிரதமர் இறப்புக்குக் காரணம் சரிதான் என்கிற வார்த்தை ஒரு அரசியல் இயக்கத் தலைவரான உங்களிடமிருந்து வருகிறதே?

இவர்கள் என்ன சொல்கிறார்கள், ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்கிறார்கள், அப்படி பழி சுமத்தி பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்றார்கள். ஐபிகேஎப் போய் அங்கு என்ன செய்தது. 3 ஆண்டுகாலம் எத்தனை துன்பமான காலகட்டம். அதை வெளிப்படையாக விவாதிக்கத் தயாரா? கே.எஸ்.அழகிரி வரத் தயாரா? எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று குவித்தது அமைதிப் படை. பேசுவோம் வாருங்களேன்.

அதையே 28 ஆண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறீர்களே? காந்தியை கோட்சே கொன்றார். சற்று தாமதமாகிவிட்டது என்றபோது கோபம் வரவில்லை? காந்தியின் உருவப்படத்தை கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டபோது கோபப்படவில்லையா? காந்தி ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று இன்று கேள்வித்தாளில் வரும்போது வருத்தப்படவில்லையா? அதெல்லாம் எப்படி? அந்த ரோஷம் வரட்டும் என்றுதான் இப்படிப் பேசுகிறேன்.

வெறுமனே, கடந்த 28 ஆண்டுகளாக ஒரு குற்றமும் செய்யாத எங்கள் பிள்ளைகள் 7 பேரை சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு பேசவில்லையா? நாங்களும் விடுதலை செய்யக்கோரி எவ்வளவு காலம் போராடுகிறோம். காந்தியைக் கொன்ற கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீதான தடை கூட 16 மாதங்களில் நீக்கப்பட்டது. ஆனால் 28 ஆண்டுகளாகத் தடை, தடை என இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தடை?.

விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். விடுதலைப்புலிகள் இயக்கமே இல்லை என்கிறீர்கள். தமிழர் என்றாலே பயங்கரவாதியாக பார்க்கும் பார்வை. இப்போது ஏன் மலேசியாவில் 7 பேரைக் கைது செய்கிறீர்கள். கேட்டால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்கிறார்கள். விடுதலைப் புலிகள் எங்கு இருக்கிறார்கள்?

ராஜீவ் காந்தியைச் சுட்டது சரிதான் என்று பேசுவது சரியா?

காந்தியை சுட்டது கோட்சே . அது சரிதான் என்று பேசும்போது வருத்தமில்லையா? நாங்கள் என்ன சொல்கிறோம். வரலாறு மாறும் என்கிறோம். இன்றைக்கு காந்தியை விட்டுவிட்டு வல்லபாய் படேலை தூக்கிப் பிடிக்கவில்லையா? வரலாறு ஒருநாள் மாறும். எம் பிள்ளைகள் பிரபாகரன் படத்தை நெஞ்சில் குத்திக்கொண்டு சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் செல்லத்தான் போகிறார்கள்.

நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெறுவீர்களா?

எதற்கு திரும்பப் பெற வேண்டும். 25 ஆண்டுகளாக இதைத்தான் பேசி வருகிறேன். இதற்காகவே பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளேன். திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இவர்களுக்கு இது புதிதாக இருக்கும்போது தூக்கிக்கொண்டு போராடுகிறார்கள்.

இவ்வாறு சீமான் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x