

விருதுநகர்
விருதுநகரில் வண்டு, புழு வைத்த சத்துமாவை கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கிய அங்கன்வாடி ஊழியர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு வண்டு மற்றும் புழு வைத்த சத்துமாவு வழங்கப்படுவதாக இந்து தமிழ் திசை நாளிதழில் கடந்த 12-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்தின் உத்தரவின்பேரில் விருதுநகரில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அ.ச.ப.சி.சி.நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு வண்டு மற்றும் புழு வைத்த சத்துமாவு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அக்குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, ஈரமான தரையில் சத்துமாவு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில், சுண்டல் மற்றும் பாசிப்பயறு போன்றவை வண்டு வைத்த நிலையில் இருந்ததும், அதன் மூலம் சத்துமாவு பாக்கெட்டுகளிலும் வண்டு, புழு வைத்ததும் தெரியவந்தது.
அங்கன்வாடி மையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காத காரணத்தால்தான் இதுபோன்ற தவறு நடந்ததும் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திற்கு ஆய்வு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள சமத்துவபுரத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச் சத்துத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.