

விழுப்புரம்
மு.க.ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வேம்பி கிராமத்தில் இன்று (அக்.14) அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர் பாண்டியராஜன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் இங்கே முகாமிட்டு பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். 'கொள்ளை கும்பல்' என முதல்வர் உள்ளிட்டோரை கொச்சையான வார்த்தைகளில் பேசுகிறார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பை இரு நாடுகளும் வரவேற்றுள்ள நிலையில் அவற்றை கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
சீன அதிபர் மூன்று இடங்களைச் சுட்டிக்காட்டி அதில் மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தார். ஆனால் பிரதமர் மோடி தான் இந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சீன அதிபர் சந்திப்பை ஒருபுறம் வரவேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். மறுபுறம் தனது தொழில்நுட்ப அணியினர் மூலம் 'கோ பேக் மோடி' என தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இதனை 52% பாகிஸ்தானியர்கள்தான் வரவேற்றுள்ளனர். இது கிட்டத்தட்ட தேசத் துரோக செயலாகவே கருத வேண்டும். எனவே இது போன்ற விஷமத்தனமான தகவல் பரப்பும் குழுவை மு.க.ஸ்டாலின் கலைக்க வேண்டும்.
அவரது போலியான நடவடிக்கைகள் இதன் மூலம் வெளியாகிறது. தமிழ் மொழி அறியாத அவர் புறநானூறு, திருக்குறளை மேற்கோள் காட்டி தெளிவாகப் பேசுகிறார். ஆனால் தமிழ்த் தலைவர் கருணாநிதியின் புதல்வரான ஸ்டாலின் ஒரு பழமொழியைக் கூட சரியாகப் பேசத் தெரியாமல் கொச்சையாகப் பேசி வருகிறார். அவர் தோல்வி பயத்தில் உள்ளதால் முதல்வர் உள்ளிட்டோரைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்".
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.