Published : 14 Oct 2019 12:52 PM
Last Updated : 14 Oct 2019 12:52 PM

நீர்ப்பாசனத் திட்டம் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறும் முதல்வர் பழனிசாமி; நாங்குநேரி மக்களை ஏமாற்ற திட்டம்; கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி மக்களை ஏமாற்றுவதற்காக, நீர்ப்பாசனத் திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற அவதூறான கருத்துகளைக் கூறியிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக்.14) வெளியிட்ட அறிக்கையில், "நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்ப்பாசனத் திட்டம் குறித்து ஆதாரமற்ற அவதூறான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இத்திட்டத்தைப் பொறுத்தவரை கருணாநிதி முதல்வராக இருந்த போது, 2009 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.369 கோடி ஒதுக்கப்பட்டு தீவிரமாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த 50 ஆயிரம் ஹெக்டேர் நிலம் நீர்பாசனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் உப்பு நீராகியுள்ள நீராதாரங்கள் பயன்படுத்துகிற நல்ல நீராக மாறும்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் வீணாகக் கடலில் கலக்கிற 14 டிஎம்சி நீரை தடுத்து நிறுத்தி, விவசாயிகளுக்குப் பயன் தருகிற வகையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திட்டம் தொடங்கப்பட்ட 2 வருடங்களில் ரூபாய் 214 கோடி செலவிடப்பட்டு திட்டத்தின் பாதி வேலைகள் முடிந்துவிட்டன.

இந்நிலையில் 2011-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை கிடப்பில் போடுகிற முடிவை எடுத்தார். கருணாநிதி ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்குவது என்பது ஜெயலலிதாவின் கொள்கையாகவே இருந்தது. எனவே, இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக அந்தப் பகுதியை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016-க்குள் இத்திட்டத்தை முடித்து விடுவோம் என்று உறுதி கூறியது.

ஆனால், அதன்படி எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. மீண்டும் 2017-ல் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறியது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது.

நாங்குநேரி சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார் இத்திட்டத்தை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்திப் பேசினார். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தமிழக அரசு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தது. இதன்படி, எந்தவிதமான முறையான திட்ட மதிப்பீடும், ஆய்வும் செய்யாமல் டெண்டர் விடப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவான 12 ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இதனால், ஒப்பந்தக்காரர்கள் பயன் அடைந்தார்களே தவிர, இணைப்பு கால்வாய் திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மொத்தத்தில் நான்கு கட்டப் பணிகளில் இரண்டு கட்டப் பணிகள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டது. ஆனால், மீதிப் பணிகள் 2011-க்குப் பிறகு நடைபெறவில்லை. தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் இத்திட்டம் குறித்து முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டம் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யான வாக்குறுதியை வழங்கியிருக்கிறார். அத்துடன் நில்லாமல், திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமலேயே திட்டம் அறிவிக்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறியிருக்கிறார்.

ஆனால், திட்ட அறிவிப்பு வந்தவுடனேயே திருநெல்வேலி மாவட்டத்தில் 694 ஹெக்டேர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 106 ஹெக்டேர் நிலங்களும் இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்தாமல் திட்டத்தின் பாதி பணிகள் நிறைவு பெற்றிருக்காது என்பதை ஒரு முதல்வர் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்புக்குரியது. ஒரு முதல்வராக இருப்பவர் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்து முடிந்த வேலைகளை நடக்கவில்லை என்று கூறுவதைவிட முறையற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

இத்திட்டப் பணிகள் 2009-ல் தொடங்கப்பட்டு, 2011 வரை 50 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக இந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்காக இந்த அரசு எடுத்த முயற்சிகள் என்ன? திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதனாலேயே அந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் முடக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அரசியல் உள்நோக்கத்தோடு கருதியதால் தான் இத்திட்டம் முடக்கப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா ?

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதற்குப் பிறகும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட காரணத்தினால்தான் இப்பணியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தமான சூழல் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இப்பகுதிகளுக்கு குறிப்பாக நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு அதிமுக அரசு செய்த துரோகத்திற்கு உரிய பாடத்தை வாக்காளர்கள் வருகிற தேர்தல் நாள் அன்று நிச்சயம் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழக அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்குப் பாடம் புகட்டுவதற்கு கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, அதிமுக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும்," என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x