Published : 14 Oct 2019 12:30 PM
Last Updated : 14 Oct 2019 12:30 PM

தலைவனைப் பற்றி பேச நீ யார்?- தேமுதிக கூட்டத்தில் ரகளை செய்த திமுக தொண்டர்

தீப்பொறி செல்வதாஸ்.

சென்னை

கே.கே.நகரில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பற்றி சர்ச்சையாகப் பேசியதால் மதுபோதையிலிருந்த திமுக தொண்டர் ஒருவர் கூட்டத்தில் திடீரென ரகளையில் ஈடுபட்டார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதன் 15-ம் ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழா தெருமுனைக் கூட்டம் நேற்று இரவு கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில் நடைபெற்றது. தேமுதிகவின் 131-வது வட்டச் செயலாளர் சீனிவாசன் இவ்விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் போரூர் தினகர், பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி செல்வதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக 9 மணிக்கு மைக்கைப் பிடித்த தலைமைப் பேச்சாளர் தீப்பொறி செல்வதாஸ் பேசினார். அவரது பேச்சில் மறைந்த தலைவர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது கூட்டத்தினிடையே மதுபோதையில் வந்த நபர், "எங்கள் தலைவரைப் பற்றி எப்படி அவதூறாகப் பேசலாம்? தலைவரைப் பற்றி பேச நீ யார்?" எனக் கூறி ரகளையில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் அந்த நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த போலீஸார் அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மதுபோதையில் கூட்டத்தில் தகராறு செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான ஆசைத்தம்பி (40) எனத் தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக நிர்வாகிகள் ஒருபுறமும், பிடிபட்ட நபருக்கு ஆதரவாக திமுகவினர் மறுபுறமும் ஸ்டேஷனில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x