Published : 14 Oct 2019 10:37 AM
Last Updated : 14 Oct 2019 10:37 AM

சிறுமலை அடிவாரப் பகுதியில் காய்த்துக் குலுங்கும் திராட்சை; கட்டுப்படியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுமலை அடிவாரமான ஜாதிக்கவுண்டன்பட்டியில் காய்த்துக் குலுங்கும் திராட்சைப் பழங்கள்.

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்

சிறுமலை அடிவாரப் பகுதியில் திராட்சை காய்த்துக் குலுங்கி அறுவடைக்குத் தயாராகி வருகிறது. கட்டுப்படியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து மதுரை மாவட்ட எல்லை வரை உள்ள சிறுமலை மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் திராட்சை பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் விளைவிக்கப்படும் திராட்சைக்கு அடுத்து இப்பகுதியில் அதிக அளவில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தத் திராட்சை நல்ல சுவையாக இருப்பதால் சந்தையில் வரவேற்பு கிடைக்கிறது. தற்போது திராட்சைகள் காய்த்துக் குலுங்கி அறுவடைக்குத் தயாராக உள்ளன.

சிறுமலை அடிவாரக் கிராமங் களான சின்னாள பட்டி அருகேயுள்ள ஜாதிக் கவுண்டன் பட்டி, பெருமாள் கோவில்பட்டி, அமலி நகர், ஜெ.ஊத்துப்பட்டி, மெட்டூர், காமலாபுரம், வெள் ளோடு, செட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பில் திராட்சை சாகுபடி செய்யப் பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்து பழங்கள் தரமின்றி விலையும் குறைந்தது. இந்த ஆண்டு தேவையான மழை பெய்ததால் பழங்கள் திரட்சியாகவும், கொத்துகள் அதிகமாகவும் காணப்படுகின்றன. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். தற்போது அறுவடை செய்யப்படும் திராட்சை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இந்த திராட்சை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.

ஜாதிக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த திராட்சை விவசாயி மணி கண்டன் கூறுகையில், ஆண்டுக்கு மூன்று முறை திராட்சை அறுவடை செய்கிறோம். திராட்சைப் பழங்களை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது. தற்போது அறுவடை தொடங்கிய நிலையில் நல்ல விலை கிடைக்கிறது. அதிக மழை பெய்து கொடியில் உள்ள பழங்களைச் சேதப்படுத்தாமல் இருந்தால் இந்த முறை நல்ல வருவாய் ஈட்டலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x